கால்வாய்கள் தூர்வாரப்படாததால் ஏரிகள் நிரம்பாததால் விவசாயிகள் ஏமாற்றம்


கால்வாய்கள் தூர்வாரப்படாததால்  ஏரிகள் நிரம்பாததால் விவசாயிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2017 3:46 AM IST (Updated: 19 Oct 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

தென் பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடலில் கலந்து வீணாகிறது. இதனால் ஏரிகள் நிரம்பாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாகூர்,

கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வெளியேற்றப்படும் தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளமாக கரைபுரண்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறு அணைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

கடைசியாக உள்ள சாத்தனூர் அணையும் நிரம்பி அங்கிருந்து உபரி தண்ணீர் வெளியேறி வருகிறது. அதனால் சொர்ணாவூர் அணை, சித்தேரி அணை மற்றும் கொமந்தான்மேடு தடுப்பணை ஆகியவை நிரம்பி வழிகின்றன. இந்த 3 அணைகளும் புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதில் சொர்ணாவூர், அணைக்கட்டில் இருந்து வாய்க்கால்கள் மூலம் பாகூரில் உள்ள பாகூர் ஏரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 24 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். அதேபோல் சித்தேரி அணைக்கட்டில் இருந்து கால்வாய் மூலமாக சித்தேரி, பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம் உள்பட பல ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

தென் பெண்ணை ஆற்றில் தற்போது வரும் தண்ணீர் தொடர்ந்து இதேபோல் எத்தனை நாட்களுக்கு வரும் என்று உறுதியாக சொல்லமுடியாத நிலை உள்ளது. மழை பெய்வது நின்றுவிட்டால் தண்ணீர் வரத்து குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

கால்வாய்கள் தூர்வாரப்படாததால், அடைப்புகள் ஏற்பட்டு தென் பெண்ணை ஆற்றில் செல்லும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொமந்தான்மேடு தடுப்பணை, சித்தேரி அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு, பங்காரு வாய்க்கால் மற்றும் வரத்து வாய்க்கால்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பங்காரு வாய்க்காலில் கரையாம்புத்தூர் பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அங்கு வாய்க்கால் உடைப்பு காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதுபற்றி தகவல் அறிந்ததும் கரையாம்புத்தூர் மற்றும் பாகூர் போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதன்பின் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு பாகூர் ஏரிக்கு சென்று பார்வையிட்டனர்.

Next Story