கர்நாடக சட்டசபை வைர விழா ஆடம்பரமாக கொண்டாட எதிர்ப்பு


கர்நாடக சட்டசபை வைர விழா ஆடம்பரமாக கொண்டாட எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Oct 2017 3:57 AM IST (Updated: 19 Oct 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையின் வைர விழாவை ஆடம்பரமாக கொண்டாட எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் ரூ.10 கோடிக்குள் விழா செலவுகளை முடிக்க அந்த மாநில முதல்-மந்திரி சித்தராமையா அறிவுறுத்தி உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விதான சவுதா கட்டிடம் உள்ளது. இது மாநில சட்டசபை மற்றும் அரசின் தலைமை செயலகமாக செயல்பட்டு வருகிறது. இந்திய அளவிலான சட்டசபைகளில் அதிக கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது.

இதையொட்டி வைர விழாவை கொண்டாட சபாநாயகர் கே.பி.கோலிவாட், மேல்-சபை தலைவர் சங்கரமூர்த்தி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். வருகிற 25, 26-ந் தேதிகளில் இந்த விழா நடக்கிறது. 25-ந் தேதி சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ரூ.26 கோடி செலவில் விழாவை மிக ஆடம்பரமாக நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுக்கு நினைவு பரிசாக தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் தங்க நாணயமும், விதான சவுதாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெள்ளி தட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இது தவிர விதான சவுதா பற்றி அதிக செலவில் ஆவண படம், அறுசுவை உணவு என அனைத்தும் தயார் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த வைர விழா கொண்டாட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலத்தில் மழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் வைர விழாவுக்கு ரூ.26 கோடியை ஒதுக்க சாத்தியம் இல்லை என்று கூறி முதல்-மந்திரி சித்தராமையா அதை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் எம்.எல்.ஏ.க்களுக்கு விலை உயர்ந்த நினைவு பரிசு வழங்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

வைர விழா கொண்டாட்ட செலவுகளை ரூ.10 கோடிக்குள் ஒரு நாளில் முடித்துக்கொள்ளும்படியும் சித்தராமையா அறிவுறுத்தி உள்ளார்.

Next Story