அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்


அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 20 Oct 2017 3:00 AM IST (Updated: 19 Oct 2017 8:39 PM IST)
t-max-icont-min-icon

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவில்பட்டி,

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய கட்டிடம் திறப்பு விழா


கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் புறநோயாளிகளுக்கான கண், தோல், எலும்புமூட்டு, மனநல நோய் சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆண்கள், பெண்கள் அறுவை சிகிச்சை அரங்கங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. விழாவுக்கு உதவி கலெக்டர் அனிதா தலைமை தாங்கினார். மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பானு, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் பூவேசுவரி வரவேற்று பேசினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

அதிக கட்டணம் வசூலித்த...

நடிகர் கமலஹாசன் மருத்துவரும், விஞ்ஞானியும் கிடையாது. அவர் நிலவேம்பு கசாயம் குறித்து தவறான கருத்து தெரிவித்து உள்ளார். அவர் மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது. நிலவேம்பு கசாயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தீபாவளி தினத்தன்று வெளியான புதிய திரைப்படங்களுக்கு சில திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நவீன கருவிகள்

டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் ரத்த தட்டணுக்களின் குறைவினை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 24 நவீன கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. பருவநிலை மாறுபாடு காரணமாக டெங்கு காய்ச்சல் நோய் பரவியது. இதனை விரைவில் முழுமையாக கட்டுப்படுத்துவோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Next Story