ஊரப்பாக்கத்தில் பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; உரிமையாளர் பலி


ஊரப்பாக்கத்தில் பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2017 5:30 AM IST (Updated: 20 Oct 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

ஊரப்பாக்கத்தில் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதன் உரிமையாளர் உடல் கருகி பலியானார்.

வண்டலூர்,

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவர் ஊரப்பாக்கம் பிரியா நகர் பகுதியில் பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இங்கு குரோம்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (45) என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் விஜயகுமாரும், சரவணனும் பெயிண்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திடீரென அங்கிருந்த எந்திரத்தில் இருந்து தீப்பொறி கிளம்பியது. உடனே பெயிண்ட் ரசாயனத்தில் தீப்பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடி விட்டார்.

விஜயகுமாரும், தொழிற்சாலையில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாக தெரிகிறது. இதற்குள் தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதில் விஜயகுமார் சிக்கிக்கொண்டார்.

விபத்து குறித்து உடனே அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மறைமலைநகரில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முழுமையாக தீயை அணைத்தபின்னர், வீரர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விஜயகுமார் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தீ விபத்து காரணமாக ஊரப்பாக்கம் பிரியா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கரும்புகை மூட்டம் காணப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. மேலும் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலை வரை புகைமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகளும் பாதிப்பு அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சரவணன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story