மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் தொடரும் மணல் திருட்டு


மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் தொடரும் மணல் திருட்டு
x
தினத்தந்தி 20 Oct 2017 4:15 AM IST (Updated: 20 Oct 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை நிரந்தரமாக தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னனர்.

மடத்துக்குளம்,

திருப்பூர்,கரூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக அமராவதி ஆறு உள்ளது. கரையோர கிராமங்களின் குடிநீர் தேவையை தீர்ப்பது மட்டுமல்லாமல் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகள் அமராவதி ஆற்றின் மூலமே பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் சீராக இருப்பதற்கு அமராவதி ஆறு உறுதுணையாக உள்ளது.

இந்த நிலையில் அமராவதி ஆற்றின் பல பகுதிகளில் அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அமராவதி ஆறு பாழ்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து பல பகுதிகள் மண் அள்ளப்பட்டு பள்ளங்கள் உருவாவதால் ஆற்றின் போக்கு மாறி வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அருகிலுள்ள விளைநிலங்களிலும், கிராமங்களிலும் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லும் காலங்களில் மணல் திருட்டு ஓரளவு குறைந்திருக்கும் ஆனால் தற்போது மணலுக்கு நல்லவிலை கிடைப்பதால் ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையிலும் மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் பகுதியில் ஆற்று அருகிலுள்ள பட்டா நிலங்களில் முறைகேடாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் “மணல் திருட்டு என்பது எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயமில்லை. எதிர்கால சந்ததியினரையே பாதிக்கக்கூடிய ஆபத்தான விஷயமாகும். கடத்தூர் பகுதியில் ஆற்றையொட்டி பட்டா நிலங்களில் ஆற்று மணல் அதிக அளவில் உள்ளது.

இத்தகைய நிலங்களில் அத்துமீறி நுழையும் மர்ம நபர்கள் மூடை, மூடையாக மணலைக்கட்டி வாகனங்கள் மூலம் கடத்துகிறார்கள். இதை தடுக்க முயற்சிக்கும் நில உரிமையாளர்களை மிரட்டும் செயலிலும் ஈடுபடுகிறார்கள். மேலும் நில உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்கச்சென்றால் புகாரை வாங்காமல் போலீசார் அலைக்கழிக்கப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

மேலும் மணல் கடத்தல் குறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் மணல் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானால் ஒரு சில நாட்கள் நடவடிக்கை எடுப்பது போல் போக்கு காட்டுகிறார்கள். ஆனால் பெரிய அளவில் நடைபெறும் மணல் திருட்டு அதிகாரிகளின் வருகையின் போது சில மூடைகளாக சுருங்கிப்போகும் மர்மத்தின் பின்னணியில் உள்ளது என்ன என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாகும்.

மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு வகை செய்ய வேண்டும் ஏனெனில் மணல் கடத்தலில் பல லட்சங்களை சம்பாதித்து விட்டு சில ஆயிரங்களை மட்டும் அபராதமாக செலுத்தி தப்பித்துக்கொள்ளும் போக்கு மாற வேண்டும். அமராவதி ஆற்றில் மணல் திருட்டை நிரந்தரமாக தடுக்க மாவட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். 

Related Tags :
Next Story