சேலம், நாமக்கல் மாவட்டங்களில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி


சேலம், நாமக்கல் மாவட்டங்களில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ரத்னா. இவர்களது மகன் ஜெயசீலன் (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 15-ந் தேதி காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயசீலனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அருகேயுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜெயசீலனுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

இதனால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயசீலன் இறந்தார். இந்தநிலையில், நேற்று காலை சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில், சிகிச்சை பலனின்றி மாணவர் இறந்துவிட்டதாகவும், சிகிச்சை அளித்ததற்கான தொகை ரூ.1½ லட்சத்தை செலுத்திவிட்டு உடலை எடுத்து செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஜெயசீலன் எப்போது இறந்தார்? இதுபற்றிய தகவல் ஏன் எங்களிடம் சொல்லவில்லை? என அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாணவரின் உறவினர்கள், அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாரும், வருவாய்த்துறையினரும் வந்து சமாதானப்படுத்தினர். பிறகு மாணவரின் உடலை உறவினர்கள் தங்களது சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு ரோடு அருகேயுள்ள ஆத்தூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (28). இவர் பி.டெக் முடித்துவிட்டு பெரம்பலூரில் உள்ள பிரபல தனியார் சர்க்கரை ஆலையில் என்ஜினீயராக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதப்பிரியா (22). பி.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு நித்யஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது சங்கீதப்பிரியா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

கடந்த 11-ந் தேதி இரவு சங்கீதப்பிரியாவுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்து பார்த்தபோது டெங்கு காய்ச்சல் என்பது தெரியவந்தது. உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 12-ந் தேதி சிகிச்சைக்காக சங்கீதப்பிரியா சேர்க்கப்பட்டார். தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கவே கடந்த 16-ந் தேதி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சங்கீதப்பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலால் இறந்து போனதையொட்டி நகராட்சி சுகாதார பணியாளர்கள் சங்கீதப்பிரியாவின் வீடு மற்றும் அந்தப் பகுதியில் கொசு புகை மருந்து அடித்தனர்.

இதேபோல் ராசிபுரம் டவுன் வி.நகர் பாப்பாத்தி காடு பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரின் மகன் விஷ்ணுபிரகாஷ் (11). இவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் விஷ்ணுபிரகாசுக்கு கடந்த 5 நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணுபிரகாஷ் பரிதாபமாக இறந்தான்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோம்பை தொட்டிய தெருவில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன் (28), விவசாயி. இவருடைய மனைவி கலையரசி (25). இவர்களுடைய மகள் பிரீத்தி (8), மகன் பிரவீன் (6) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து 2 பேரையும் பெற்றோர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்தான். பிரவீன் புதுக்கோம்பையில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரீத்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறாள்.

பிரவீன் உடலை சொந்த ஊரான புதுக்கோம்பைக்கு கொண்டு வந்து நேற்று முன்தினம் அடக்கம் செய்தனர். இந்த தகவலை அறிந்த எருமப்பட்டி வட்டார மருத்துவர்கள் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வந்தனர். அவர்களை தொட்டியதெரு பகுதியினர் திடீரென்று சிறைபிடித்தனர்.

இதையறிந்த சேந்தமங்கலம் தாசில்தார் செல்வராஜ், எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவர்களை விடுவித்தனர். 

Related Tags :
Next Story