ஒப்பந்த பணியாளர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


ஒப்பந்த பணியாளர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

சம்பள உயர்வு, போனஸ் கேட்டு துப்புரவு தொழிலாளர்கள் நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள்.

கோவை,

கோவை மாநகராட்சியில் பொது சுகாதார பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கிளனர் கள், துப்புரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

சம்பள உயர்வு கோரியும், தீபாவளி போனஸ் கேட்டும் அதிகாரிகளிடம் ஏற்கனவே மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி துப்புரவு பணியாளர்கள், டிரைவர், கிளனர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. எனினும் விதிப்படியான சம்பளம், தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என்று ஒப்பந்த பணியாளர்கள் புகார் கூறினர்.

துப்புரவு பணியாளர்கள், டிரைவர், கிளனர்கள் உள்பட 150-க்கும் மேலான ஒப்பந்த பணியாளர்கள் நேற்று காலை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் திரண்டனர். அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளான பெண் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சந்தோஷ் குமார் உள்பட பலர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி தனி அதிகாரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும், இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதால் உரிய முடிவு எடுக்கப்படும் அதுவரை போராட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தங்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பதில் ஒப்பந்த பணியாளர்கள் உறுதியாக உள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

ஒப்பந்த பணியாளர்களின் போராட்டத்தால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன. மாற்று தொழிலாளர்கள் மூலம் அந்த குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. 

Related Tags :
Next Story