டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு கோவை சிறுமி உள்பட 12 பேர் பலி கர்ப்பிணியும் இறந்த பரிதாபம்


டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு கோவை சிறுமி உள்பட 12 பேர் பலி கர்ப்பிணியும் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு கோவை சிறுமி உள்பட 12 பேர் பலியானார்கள். இதில் ஒரு கர்ப்பிணியும் இறந்துள்ளார்.

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவருடைய மகள் விஸ்மிதா (வயது 6). இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விஸ்மிதாவை அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து டாக்டர்கள் விஸ்மிதாவின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனிடையே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் விஸ்மிதா பரிதாபமாக இறந்தார். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 45 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 142 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.மழவராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அமுல்தாஸ். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் விமலா (10). இவள் முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவள் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை அவள் இறந்தாள். கள்ளக் குறிச்சி அருகே உள்ள கருணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பிரீத்தி(23). எம்.சி.ஏ. படித்து முடித்துள்ள இவர் வீட்டில் இருந்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ரத்னா. இவர்களது மகன் ஜெயசீலன் (17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரை சேலம் அருகேயுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயசீலன் இறந்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு ரோடு அருகேயுள்ள ஆத்தூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி சங்கீதப்பிரியா (22). பி.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு நித்யஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது சங்கீதப்பிரியா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சங்கீதப்பிரியா கடந்த 16-ந் தேதி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் ராசிபுரம் டவுன் வி.நகர் பாப்பாத்தி காடு பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரின் மகன் விஷ்ணுபிரகாஷ் (11). இவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் விஷ்ணுபிரகாசுக்கு கடந்த 5 நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணுபிரகாஷ் பரிதாபமாக இறந்தான். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு செங்கல்வராயன் தெருவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் சிவசங்கரின் மகன் வந்தியதேவன் (25). இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தியதேவன் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தண்டராம்பட்டுக்கு வந்தார். திடீரென அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வேலூருக்கு செல்லும் வழியிலேயே வந்தியதேவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை சோழவந்தானை அடுத்த தேனூரை சேர்ந்தவர் முனியாண்டி (58). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

சமயநல்லூரை அடுத்த தோடனேரியைச் சேர்ந்த ஆர்த்திகா (26) காய்ச்சல் காரணமாக சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 16-ந்தேதி சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குறையாதநிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை பெற்றும் பலனில்லாததால் அவர் பரிதாபமாக இறந்தார். மேலூர் கோமதியாபுரத்தை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் (48). சவர தொழிலாளியான இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருப்பூரை சேர்ந்தவர் திவ்யா(27). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இரவில் திடீரென்று அவருக்கு மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி திவ்யா உயிரிழந்தார்.

இரவில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் திவ்யா இறந்ததாகவும், டாக்டர் இருந்திருந்தால் அவர் உயிர் பிழைத்து இருப்பார் என்றும் திவ்யாவின் சகோதரி தீபா குற்றம்சாட்டினார். இந்த பிரச்சினை குறித்து அரசு ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் எந்த டாக்டருக்கு பணி ஒதுக்கப்பட்டது, அவர் பணியில் இருந்தாரா? என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோம்பை தொட்டிய தெருவில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன் (28), விவசாயி. இவருடைய மனைவி கலையரசி (25). இவர்களுடைய மகள் பிரீத்தி (8), மகன் பிரவீன் (6) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து 2 பேரையும் பெற்றோர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்தான். பிரீத்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறாள். 

Related Tags :
Next Story