வருகிற 22–ந் தேதி முதல்–மந்திரி சித்தராமையா பண்ட்வால் வருகை


வருகிற 22–ந் தேதி முதல்–மந்திரி சித்தராமையா பண்ட்வால் வருகை
x
தினத்தந்தி 20 Oct 2017 4:32 AM IST (Updated: 20 Oct 2017 4:32 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 22–ந் தேதி முதல்–மந்திரி சித்தராமையா பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பண்ட்வால் வருகிறார்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் பொறுப்பு மந்திரியும், மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியுமான ரமாநாத் ராய் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் சட்டமன்ற தொகுதியில் ரூ.148.29 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மினி விதான சவுதா, அரசு பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு கட்டிடம், மெஸ்காம் அலுவலகம், குடிநீர் திட்டம், பூங்கா, போக்குவரத்து கழக அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழாவும், மேலும் ரூ.104.21 கோடி செலவில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் வருகிற 22–ந் தேதி(நாளை மறுநாள்) பண்ட்வாலில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் 22–ந் தேதி அன்று காலை மங்களூரு பஜ்பே விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் அவர் கார் மார்க்கமாக வந்து மின் விதான சவுதாவை திறந்து வைக்கிறார். அதையடுத்து அவர் அரசு பஸ் நிலையம், மெஸ்காம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார்.

பின்னர் அவர் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் மொத்தம் பண்ட்வால் சட்டமன்ற தொகுதியில் மட்டும் ரூ.252.50 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்–மந்திரியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சுதீர் குமார் ரெட்டி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

இவ்வாறு மந்திரி ரமாநாத் ராய் கூறினார். பேட்டியின்போது துணை கலெக்டர் குமார், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ரவி உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story