மதுரை அருகே பிளஸ்-1 மாணவர் கடத்தி கொலை; 2 பேர் கைது பொதுமக்கள் சாலைமறியல்


மதுரை அருகே பிளஸ்-1 மாணவர் கடத்தி கொலை; 2 பேர் கைது பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 20 Oct 2017 5:05 AM IST (Updated: 20 Oct 2017 5:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே பிளஸ்-1 மாணவர் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை எல்லீஸ்நகர், போடி லைன் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், மின்வாரிய ஊழியர். இவருக்கு சுடலைமுத்து, சேகர்(வயது 17) என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஆரோக்கியதாஸ் சில மாதங்களுக்கு முன்பு மதுரை அருகே உள்ள வைக்கம் பெரியார் நகரில் வசித்து உள்ளார். அப்போது ஆரோக்கியதாஸ் மகளை அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் காதலித்து வந்தார்.

இதனை சுடலைமுத்து தட்டி கேட்டதால், அவருக்கும் முத்துப்பாண்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

எனவே ஆரோக்கியதாஸ் வீட்டை காலி செய்து விட்டு எல்லீஸ்நகர் பகுதிக்கு குடிவந்தார். அதனால் சேகர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து பிளஸ்-1 படித்து வந்தார். தீபாவளி பண்டிகை தினத்தன்று சேகர் நண்பர்களை சந்திக்க வைக்கம் பெரியார் நகருக்கு சென்றார். அப்போது அங்கு வந்த முத்துப்பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் சேகரிடம் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசார் வருவதை அறிந்த முத்துப்பாண்டியுடன் வந்த கும்பல் சேகரை அங்கிருந்து கடத்தி சென்று விட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வைக்கம் பெரியார் நகரில் உள்ள வயல்வெளியில் ரத்த காயத்துடன் சேகர் பிணமாக கிடப்பதை அந்த பகுதி மக்கள் கண்டனர். போலீசார் விரைந்து வந்து சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அந்த பகுதி பொதுமக்கள் சேகரின் உடலை எடுக்க விடாமல் தடுத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் சேகரை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை அவரது உடலை எடுக்கக்கூடாது என்று கூறினார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டியின் தந்தை சாமித்துரை(48), செல்வகுமார் (25) ஆகியோரை கைது செய்தனர். முத்துப்பாண்டி உள்ளிட்ட சிலரை தேடி வருகிறார்கள்.

Next Story