தூத்துக்குடி மாவட்டம் சிறப்பாக நூற்றாண்டு விழா நடத்தியதற்கான விருதை பெற வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் சிறப்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தியதற்கான விருதை பெற வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சிறப்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தியதற்கான விருதை பெற வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
ஆலோசனை கூட்டம்தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அடுத்த மாதம்(நவம்பர்) 22–ந் தேதி நடத்தப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நலத்திட்ட உதவிகள்கடந்த 1977–ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். நல்லாட்சி செய்தார். அவர் ஆட்சியில் இருந்த போது சுயமரியாதை பரப்பி, மூடநம்பிக்கையை ஒழித்த பெரியாருக்கு நூற்றாண்டு விழா நடத்தினார். அதே போன்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். அதன்படி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30–06–17 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக 19 மாவட்டங்களில் விழா நடந்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம்(நவம்பர்) 22–ந் தேதி விழா நடக்கிறது. இந்த விழாவில் மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முடிக்கப்பட்ட திட்டங்கள் திறப்பு மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
நமது மாவட்டத்தில் இந்த விழாவை கொண்டாடுவதில் முக்கியத்துவம் உண்டு. எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக இருந்த போது, நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் உருவானது. அந்த வகையில் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போது எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, எட்டயபுரத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நூற்பு ஆலை ஆகியவற்றை எம்.ஜி.ஆர். அமைத்து தந்தார்.
விருதுமேலும் தூத்துக்குடி மாவட்டம் அனைத்து துறைகளிலும் முதன்மையாக உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடக்க உள்ளது. அதில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். அந்த விழாவில் சிறப்பாக நூற்றாண்டு விழா நடத்திய மாவட்டத்துக்கு விருது வழங்கப்பட உள்ளது. அந்த விருதை தூத்துக்குடி மாவட்டம் பெற வேண்டும். அந்த அளவுக்கு அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அதிக அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் வெங்கடேஷ்கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஷ் பேசும் போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். முடிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த விவரங்களையும், புதிதாக மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களையும் சேகரித்து அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். அனைத்து துறையினரும், இது நமது விழா என்று நினைத்து இணைந்து பணியாற்ற வேண்டும். விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள், மாரத்தான் போட்டிகள் நடத்த வேண்டும். சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான விளையாட்டு போட்டிகள், மலர், காய்கறி கண்காட்சி, குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி, உணவுத்திருவிழா நடத்த வேண்டும். விழாவுக்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஒவ்வொரு துறை சார்பிலும் கண்காட்சி அரங்கு அமைக்க வேண்டும். இதில் சிறந்த அரங்குக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை நன்றி கூறினார்.
ஆய்வுமுன்னதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ள இடம் கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.