காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலால் பாதித்தவர்களை நலம் விசாரித்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார்.
மேலும் டாக்டர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். டெங்கு கண்டுபிடிக்க பயன்படும் கருவிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிலவேம்பு கசாயம் வழங்கலாம் என்று கடந்த 2012–ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தார். நிலவேம்பு கசாயம் தொடர்பாக 40–க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் உள்ளன. மத்திய அரசு நிறுவனம் மற்றும் பன்னாட்டு அளவிலான ஆய்விலும் நிலவேம்பு கசாயத்தால் பக்கவிளைவுகள் இல்லை என்று உறுதி ஆகியுள்ளது.29 வகையான வைரஸ் காய்ச்சல்கள் உள்ளன. எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் இல்லை. காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 105 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 10 பேருக்கு தான் டெங்கு காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை நடந்து வருகிறது. ஒருசிலர் விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப உள்ளனர்.
டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட உடனே ரத்த பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆய்வின்போது ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், நிர்வாகிகள் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், வீ.வள்ளிநாயகம், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சசிகலா மற்றும் அரசு அதிகாரிகள், டாக்டர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.