நிலவேம்பு கசாயம் குறித்து பீதியை உண்டாக்க கூடாது இல.கணேசன் எம்.பி. பேட்டி


நிலவேம்பு கசாயம் குறித்து பீதியை உண்டாக்க கூடாது இல.கணேசன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2017 4:30 AM IST (Updated: 21 Oct 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

நிலவேம்பு கசாயம் குறித்து பீதியை உண்டாக்கக்கூடாது என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.

திருச்சி,

டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார குழு பாராட்டு தெரிவிக்கவில்லை. தமிழக அரசின் செயல்பாடுகளில் குறை சொல்லாத அந்த குழு, டெங்கு காய்ச்சல் பிரச்சினையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளில் திருப்தி அடைந்து உள்ளது. அவ்வளவு தான். என்னை பொறுத்தவரை இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது நாம் வெளிநாட்டில் இருந்து கற்கவேண்டியது இல்லை. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை புரிந்தாலே இதனை கட்டுப்படுத்தி விடலாம்.

நிலவேம்பு கசாயம் குறித்து தேவை இல்லாமல் பீதியை உண்டாக்க கூடாது. இந்நிலை மாறவேண்டும். ஆங்கில மருத்துவம் மூலம் தான் அதாவது அலோபதி மருத்துவ முறை தான் சிறந்தது, வேறு எதனையும் ஏற்க கூடாது என்பது சரி அல்ல. தமிழக அரசு நிலவேம்பு கசாயத்தை காய்ச்சி இலவசமாக வழங்குவது சரியாக இருக்குமா? இல்லையா? என்ற ஆராய்ச்சியில் இறங்க கூடாது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் விரைவில் கட்டுக்குள் வரும்.

மத்திய மந்திரி நட்டா எனக்கு சிறந்த நண்பர். அவருடன் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரை பக்கத்தில் அமைய வாய்ப்பு இருப்பதாக கூறியதை தான் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தேன். அதிகாரப்பூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை. மதுரையில் தான் அமைக்க முடிவாகிவிட்டது என கூறவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைய வேண்டும் என சொல்லவேண்டியது மாநில அரசு. முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசு. தமிழகத்தில் அதிக மக்கள் பயன் அடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைந்தாலும் அது நல்லது தான்.

மெர்சல் திரைப்படம் பற்றி கருத்து கூறி அந்த படத்திற்கு விளம்பரம் தேடிக்கொடுக்க நான் விரும்பவில்லை. உண்மையிலேயே மெர்சல் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என எனக்கு தெரியாது. நண்பர்களிடம் கேட்டு தான் அதனை தெரிந்து கொண்டேன். திரைப்படங்களில் அரசுக்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்தால் தேச பக்தர்கள் மெர்சல் ஆகி விடுவார்கள்.

நாகை மாவட்டம் பொறையாறில் அரசு பணிமனை கட்டிடம் இடிந்து 8 தொழிலாளர்கள் பலியானதாக கூறுகிறார்கள். இதுபற்றிய முழு விவரமும் எனக்கு வரவில்லை. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பின்னர் ஆறுதல் கூறுவது, நிவாரண உதவி வழங்குவது என்ற சடங்குகளில் மட்டும் அரசு கவனம் செலுத்துவதை விட்டு விட்டு தமிழகத்தில் இருக்கிற எல்லா அரசு கட்டிடங்கள், அரசு பஸ்கள் உறுதியாக இருக்கிறதா? என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story