கிழக்கு சரபங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பாலம் அமைக்க கோரிக்கை


கிழக்கு சரபங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பாலம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2017 4:30 AM IST (Updated: 21 Oct 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே சரங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதின் காரணமாக பாலம் அமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓமலூர்,

ஏற்காடு மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெய்து வந்த கனமழை காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கிழக்கு சரபங்கா ஆறு ஓடும் வழித்தடத்தில் உள்ள காமலாபுரம் சின்னேரி, பெரியேரி, செட்டிப்பட்டி உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின.

இதேபோல் மேற்கு சரபங்கா ஆறு ஓடும் வழித்தடத்தில் உள்ள டேனிஷ்பேட்டை, கோட்டேரி, பண்ணப்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. இந்த நிலையில் கிழக்கு சரபங்கா ஆறு மணல்மேடு என்ற இடத்தில் இரண்டாக பிரிந்து செல்கிறது. இதில் ஒன்று காமலாபுரம் ஊராட்சி மாந்தோப்பு வழியாக கோட்டமேட்டுப்பட்டி பூலேரிக்கு செல்கிறது.

மாந்தோப்பு பகுதியில் ஆற்றின் மறுகரையில் காட்டுவலவு என்ற கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், இந்த ஆற்றின் குறுக்கே செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து காட்டுவலவு கிராமமக்கள் கூறியதாவது:-

கனமழை பெய்யும் காலங்களில் கிழக்கு சரபங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, எங்கள் கிராமம் துண்டிக்கப்பட்டு தீவுபோல ஆகிவிடும். தற்போது நீர்வரத்து குறைந்த அளவிலேயே உள்ளதால் நாங்கள் தட்டுத்தடுமாறி ஆற்றை கடந்து சென்று வருகிறோம். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே, இந்த பகுதியில் கிழக்கு சரபங்கா ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story