பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: சாலைமறியலில் ஈடுபட்ட வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கைது


பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: சாலைமறியலில் ஈடுபட்ட வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கைது
x
தினத்தந்தி 21 Oct 2017 4:25 AM IST (Updated: 21 Oct 2017 4:25 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவையில் பஸ் கட்டணம் நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கட்டண உயர்வை வாபஸ்பெறக்கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்துசெய்யக்கோரியும் முத்தியால்பேட்டையில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. மணிக்கூண்டு அருகே நடந்த இந்த போராட்டத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தலைமை தாங்கினார்.

போராட்டம் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனங்களை வேறு வழியில் திருப்பி அனுப்பிவிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர் சாலைமறியலை வாபஸ்பெற மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. உள்பட சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சிகரமாக கொண்டாடும் நேரத்தில் புதுவை அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வினை திரும்பப்பெறக்கோரி அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. உண்மையிலேயே தி.மு.க.வுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் அவர்கள் புதுவை காங்கிரஸ் அரசுக்கு கொடுக்கும் ஆதரவினை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story