‘எங்கள் மகனுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காதீர்கள்’ உருக்கமான கடிதம் சாகப்போகும் நிலையிலும் மகன் மீது பாசம்
கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதியினர், எங்கள் மகனுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காதீர்கள் என உருக்கமாக எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
ராயபுரம்,
சாகப்போகும் நிலையிலும் தங்கள் மகன் மீது அவர்கள் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் நாவல் தெருவில் வசித்து வந்தவர் சண்முகம்(வயது 75). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (65). இவர்களுக்கு ஆனந்தகுமார் என்ற மகனும், ஜானகி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் வண்டலூரிலும், மகள் விழுப்புரத்திலும் வசித்து வருகின்றனர்.
சண்முகம் இதய நோயாலும், கிருஷ்ணவேணி சிறுநீரக நோயாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் மனம் உடைந்த வயதான தம்பதியான சண்முகம்–கிருஷ்ணவேணி இருவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் மகனும், மகளும் வெளியூரில் வசிப்பதால் அவர்கள் இருவரையும் கவனிக்க ஆள் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததால் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், சம்பவம் நடந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு, தற்கொலை செய்வதற்கு முன்பாக வயதான தம்பதியினர் எழுதி வைத்து இருந்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது:–
போலீஸ் அதிகாரி அவர்களுக்கு ஆர்.சண்முகம் எழுதிக்கொண்டது என்னவென்றால், நாங்கள் இருவரும் சம்பந்தப்பட்டு எடுத்த முடிவுதான் இது. நானும், என் மனைவியும் நோய் தாங்க முடியாத காரணத்தால் இந்த முடிவை எடுத்து உள்ளோம்.
எனக்கு இதயநோய் உள்ளது. எனது மனைவிக்கு சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நோய்களை எங்கள் இருவராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்கிறோம்.
எங்களது மகன் எங்களை நன்றாக வைத்துக்கொண்டான். எங்கள் மகன் மீது எந்த தவறும் இல்லை. அவன் எங்கள் இஷ்டப்படிதான் நடந்து கொண்டான். நாங்கள் தற்கொலை செய்து கொண்டதற்காக எங்கள் மகனுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காதீர்கள். நானும் எனது மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவால் எனது மகனை ஒன்றும் செய்யாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த கடிதத்தின் அடியில் கணவனும், மனைவியும் கையெழுத்திட்டு உள்ளனர். சாகப்போகும் நிலையில் கூட அந்த கடிதத்தில் தங்கள் மகன் மீதான பாசத்தை அவர்கள் வெளிப்படுத்தி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.