ஊத்துக்கோட்டை அருகே மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டை அருகே மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் இயங்கி வந்த மதுக்கடையை கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடந்த மார்ச் மாதத்தில் அகற்றினர். இதையடுத்து சூளமேனி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்கரமனூர் கிராம எல்லையில் மதுக்கடை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. கடை அமைய உள்ள பகுதியை தாண்டி மேட்டுகாலனி, பள்ளகாலனி, கயடை, மேட்டுகண்டிகை, தமிழ்காடுகாலனி, செங்கரை உள்பட 10 கிராமமக்கள் சென்னை, ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று வர வேண்டி உள்ளது. மதுக்கடையை கீழ்கரமனு£ர் பகுதியில் அமைக்க கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுக்கடை அமைக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் இடத்தில் நேற்று கடையை அதிகாரிகள் திறந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 10 கிராம மக்கள் ஒன்று திரண்டு கடை பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். சூளமேனி– கீழ்கரமனு£ர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கடையை மூடும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று திட்டவட்டமாக கூறியவாறு கடையை நோக்கி புறப்பட்டனர்.
இதை பார்த்ததும் ஊழியர்கள் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் ஓட்டம் பிடித்தனர். அவர்களை பொதுமக்கள் சூழந்து கொண்டு தாக்க முயன்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை துணை தாசில்தார் கதிர்வேல், இன்ஸ்பெக்டர் பரந்தாமன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மதுக்கடை ஊழியர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 கிராம மக்களிடம் சமசர பேச்சுவார்தை நடத்தினர். கடையை இனி திறக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். அதற்கு அதிகாரிகள் எங்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. வேண்டும் என்றால் திருவள்ளூரில் உள்ள டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் உங்களின் கோரிக்கை மனுவை அளியுங்கள.
அதுவரை கடையை திறக்கமாட்டோம் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.