கர்நாடக அரசுக்கு மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கடிதம் என் பெயர் இடம்பெறக்கூடாது’
‘‘கர்நாடக அரசு சார்பில் நடைபெறும் திப்பு ஜெயந்தி விழா அழைப்பிதழில் எனது பெயர் இடம் பெறக்கூடாது’’ என்று கர்நாடக அரசுக்கு மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக அரசு சார்பில் ‘திப்பு ஜெயந்தி’ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற நவம்பர் 10–ந் தேதி கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், கர்நாடக அரசுக்கு மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே ஒரு கடிதம் எழுதி உள்ளார். மாநில தலைமை செயலாளர் சுபாஷ் சந்திரகுந்தியா மற்றும் உத்தரகன்னடா மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
“அரசு சார்பில் நவம்பர் 10–ந் தேதி நடைபெறும் திப்பு ஜெயந்தி விழா அழைப்பிதழில் எனது பெயர் இடம் பெறக்கூடாது. அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்“ என்று மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்ன காரணத்திற்காக அழைப்பிதழில் தனது பெயர் இடம் பெறக்கூடாது என்பது பற்றி அந்த கடிதத்தில் அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாட பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், கடந்த ஆண்டு(2016) திப்பு ஜெயந்தி விழாவில் குடகு மாவட்டத்தில் வன்முறை வெடித்ததாலும் இந்த முடிவை மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல, சிக்கமகளூரு மாவட்டத்தில் நடைபெறும் திப்பு ஜெயந்தி விழா அழைப்பிதழில் தனது பெயர் போடக்கூடாது என்று ஷோபா எம்.பி.யும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–
கர்நாடகத்தில் திப்பு ஜெயந்தி விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. திப்பு சுல்தான் சுதந்திரத்திற்காக போராடியவர். ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர் போரிட்டுள்ளார். ஆனால் திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக திப்பு ஜெயந்தி கொண்டாட கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். இதன் காரணமாகவே கடந்த ஆண்டு குடகில் வன்முறை உண்டானது. அதற்கு பா.ஜனதாவினரே காரணம். திப்பு சுல்தான் பற்றி தவறான தகவல்களை மக்களிடம் பா.ஜனதாவினர் பரப்பி வருகின்றனர்.
திப்பு ஜெயந்தி விழா அரசு சார்பில் கொண்டாடப்படுவதால், அரசு நெறிமுறைகளின்படி எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகளின் பெயர்கள் அழைப்பிதழில் இடம்பெறும். அவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். அவர்களுக்கு விருப்பம் இல்லையெனில் விழாவில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம். அனந்தகுமார் ஹெக்டே மத்திய மந்திரியாக இருந்து கொண்டு, தனது பெயரை அழைப்பிதழில் இடம்பெற செய்ய வேண்டாம் என்று கடிதம் எழுதி இருப்பது சரியல்ல. மத்திய மந்திரி ஒருவர் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.