திருப்பூரில், கலெக்டர் அலுவலகம் முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில், கலெக்டர் அலுவலகம் முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2017 4:15 AM IST (Updated: 22 Oct 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில், கலெக்டர் அலுவலகம் முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சுதர்ஷன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பொது சுகாதாரத்துறையின் மாவட்ட செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், டெங்கு ஒழிப்பு பணியில் டாக்டர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும், ஆனால் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறையை கலெக்டர் களங்கப்படுத்தியதற்கும், பொதுமக்களுக்கு களப்பணி செய்ய வரும்போது செய்ய விடாமல் ஆய்வு கூட்டம், பயிற்சி என்று மருத்துவ அலுவலர்கள் அலைக்கழிக்கப்படுவதை எதிர்த்தும், ஆஸ்பத்திரிகளில் மருத்துவ செவிலியர்கள் 5 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 1 நபர் இருப்பதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது மட்டுமின்றி, நேற்று முன்தினம் நடந்த ஆய்வு கூட்டத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் தடுப்பு துறையை குறை கூறியதாக திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் கோரிக்கை மனு ஒன்றையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர். 

Next Story