சசிகுமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் உக்கடம் கழிவுநீர் பண்ணையில் வீசப்பட்டதா?


சசிகுமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் உக்கடம் கழிவுநீர் பண்ணையில் வீசப்பட்டதா?
x
தினத்தந்தி 21 Oct 2017 11:15 PM GMT (Updated: 2017-10-22T03:22:57+05:30)

சசிகுமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை உக்கடம் கழிவு நீர் பண்ணையில் வீசப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தேடுதல்பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்

கோவை,

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 12-ந் தேதி கோவை தெற்கு உக்கடம் கோட்டை புதூரை சேர்ந்த சுபைர் (வயது 33) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (37) மற்றும் கனி(28) ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.

இது குறித்து சுபைரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். பின்னர் அவரை கோர்ட்டு அனுமதியுடன் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது ‘சசிகுமார் கொலை செய்யப்பட்ட சுப்பிரமணிய பாளையம் பகுதிக்கு சுபைரை நேரில் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது சசிகுமாரை கொன்றது குறித்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் நடித்துக் காட்டினார். அதனை போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். சசிகுமாரின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்தும் சுபைரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை உக்கடம் பைபாஸ் ரோட்டில் நாய்கள் கருத்தரிப்பு மையம் அருகே உள்ள மாநகராட்சி கழிவு நீர் பண்ணையில் வீசியதாக கூறினார்.

இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு ஆனந்த் தலைமையில் இன்ஸ்பெக் டர்கள் ஆனந்த் ஆரோக்கியராஜ், ரமேஷ் கண்ணா, ஜீவானந்தம் மற்றும் போலீசார் தலைமையில் ஆயுதங்களை தீவிரமாக தேடும் பணி நடைபெறுகிறது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களான 2 அரிவாள்கள் வீசப்பட்ட பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் கழிவு நீருக்குள் புதைந்து கிடக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த இடத்தில் மேலும் 60 அடி மற்றும் 40 அடி ஆழ கழிவு நீர் தொட்டிகளும் உள்ளது. அதிலும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. எனவே மாநகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான வாகனங்கள் மூலம் கழிவுநீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. நேற்று மாலைவரை 16 வாகனங்களில் உறிஞ்சப்பட்டது. இருந்தாலும் கழிவு நீரை அகற்ற முடியவில்லை. இதைத்தொடர்ந்து மோட்டார் வைத்து உறிஞ்சி மறு பகுதியில் விட்டு, வற்ற வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் மேலும் ஒரு சில நாட்கள் நடைபெறும் என்பதால் அதன்பின்னரே ஆயுதங்களை தேடும் பணி நடைபெறும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சசிகுமார் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், வழக்கு விசாரணைக்கு முக்கிய தடயங்கள் என்பதால் அதனை நிச்சயமாக தேடி கண்டுபிடிப்போம் என்றும், கழிவுநீரை அகற்றி ஆயுதங்களை தேடுவதற்கான செலவு தொகையை காவல்துறை ஏற்கும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story