ஆஸ்பத்திரியில், நோயாளியின் நகை, பணத்தை திருடிய மூதாட்டி கைது
ஆஸ்பத்திரியில், மயக்க மருந்து கலந்த தேநீரை கொடுத்து நோயாளியின் நகை, பணத்தை திருடிய மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை தாராவியை சேர்ந்த மூதாட்டி காந்தாபாய்(வயது65). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கண் பரிசோதனைக்காக நாயர் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் அங்கு அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்த தேநீரை காந்தாபாய்க்கு குடிக்க கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் காந்தாபாய் மயங்கினார்.
சுமார் 2 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தான் அணிந்திருந்த நகை மற்றும் பணப்பை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி காந்தாபாய் அக்ரிபாடா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், காந்தாபாய்க்கு தேநீரை கொடுத்த மூதாட்டி அதில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் நகை மற்றும் பணப்பையை திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது.
இந்தநிலையில், அந்த மூதாட்டி கோவண்டி பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவரது பெயர் கமரூன்னிசா சேக்(69) என்பது தெரியவந்தது. மேலும் அவர் இதே பாணியில் வேறு சில மருத்துவமனைகளிலும் நோயாளிகளிடம் இருந்து நகை, பணத்தை திருடியிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.