புதுச்சேரியில் அடுத்தடுத்து சாலை மறியல் அ.தி.மு.க.–பா.ஜனதா போராட்டம்
புதுவையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவையில் பஸ் கட்டணத்தை உயர்த்தி கடந்த 17–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கட்டண உயர்வு 19–ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.
கட்டணங்கள் அதிக அளவு உயர்த்தப்பட்டதால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாள்தோறும் சாலைமறியல், பஸ்கள் சிறைபிடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வெங்கடசுப்பரெட்டியார் சிலையருகில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சாலைமறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் புதுவை பஸ் நிலையம் வரை பஸ்கள் அணிவகுத்து நின்றன.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அ.தி.மு.க.வினரை கைது செய்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், துணை செயலாளர்கள் கணேசன், நாகமணி, நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், அணி செயலாளர்கள் பாப்புசாமி, ஞானவேல், சுப்ரமணி, தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்முருகன், பொன்னுசாமி, தமிழ்ச்செல்வன் உள்பட 153 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியினர் புதிய பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலுக்கு மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மறியல் காரணமாக பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட சாமிநாதன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், சோமசுந்தரம், துரை.கணேசன், செல்வம், மாநில செயலாளர்கள் நாகராஜ், சாய்.சரவணன், முருகன், ஜெயந்தி, மாவட்ட தலைவர்கள் சிவானந்தம், மோகன்குமார், மூர்த்தி உள்பட 199 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கம்யூனிஸ்டு கட்சியினர் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுதேசி மில் அருகே கூடினார்கள். அங்கிருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
அவர்கள் பஸ் நிலையத்தின் எதிர்புறம் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 சாலைமறியல் சம்பவங்களிலும் கைதானவர்கள் அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
3 சாலை மறியல்களும் அடுத்தடுத்து நடந்ததால் புதுவையில் நேற்று காலை 10 மணிமுதல் 11 மணி வரை கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரே போக்குவரத்து சீரானது.