வலுவுக்கு வணக்கம்


வலுவுக்கு வணக்கம்
x
தினத்தந்தி 22 Oct 2017 6:55 AM GMT (Updated: 22 Oct 2017 6:55 AM GMT)

“லட்சியமும், மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்கிறார், வலுதூக்கும் வீராங்கனை நிவேதா. பிளஸ்-2 மாணவியான இவர், தனது மன உறுதியாலும், அயராத முயற்சியாலும் வெற்றிகளை குவித்துவருகிறார்.

“லட்சியமும், மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்கிறார், வலுதூக்கும் வீராங்கனை நிவேதா. பிளஸ்-2 மாணவியான இவர், தனது மன உறுதியாலும், அயராத முயற்சியாலும் வெற்றிகளை குவித்துவருகிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான சப்-ஜூனியர் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 8 தங்க பதக்கங்களை வென்றிருக்கிறார். அதுமட்டு மில்லாது, இந்தியாவின் சார்பில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று அசத்தியிருக்கிறார்.

16 வயது நிவேதா, சேலம் பெரியபுதூர் அருண்நகரை சேர்ந்தவர். வெங்கடேஸ்வரன்-சித்ரா தம்பதியினரின் மகள். அங்குள்ள விநாயகா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவர், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெற்றி பதக்கங்களுடன் சேலம் வந்து இறங்கியபோது ராஜ மரியாதை கிடைத்தது. பள்ளி நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். சக மாணவிகளும் நிவேதாவை தோள்களில் சுமந்து வந்தனர்.

பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருந்த அவரிடம் பேசுவோம்:

வலுதூக்கும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

எனது தந்தை வெங்கடேஸ்வரன் வலுதூக்கும் வீரர். உடற்பயிற்சியையும், வலுதூக்கும் பயிற்சிகளையும் முறையாக மேற்கொள்வார். அப்பாவுடன் அடிக்கடி உடற்பயிற்சி கூடம் சென்று வந்ததால், எனக்கும் வலுதூக்கும் ஆசை வந்தது. என்னுடைய ஆர்வத்தை பார்த்த அப்பா, உற்சாகம் அளித்ததுடன் வலுதூக்கும் பயிற்சிகளை சொல்லிக்கொடுத்தார். 8 வயதில் தொடங்கிய முயற்சி, கடின பயிற்சிகளுக்கு பிறகு வெற்றிகளாக மாறியிருக்கிறது.

வெற்றிப் பயணம் எப்போதிருந்து தொடங்கியது?

2009-ம் ஆண்டு மாவட்ட அளவில் நடந்த வலுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டேன். கடுமையான போட்டி என்றாலும் 110 கிலோ எடையை தூக்கி முதல் பரிசை வென்றேன். அதற்கு பிறகு வெற்றிகள் குவிய ஆரம்பித்தன. தொடர் போட்டிகளில் 125 கிலோ, 150 கிலோ, 160 கிலோ எடைகளை தூக்கி வெற்றிகளை பதிவு செய்தேன். கோவையில் நடந்த ஜூனியர், சப்-ஜூனியருக்கான போட்டியில் பங்கேற்று 182.5 கிலோ எடையை தூக்கி மாநில அளவில் முதலிடம் பிடித்தேன். வலுதூக்கும் வாழ்க்கையில் முக்கியமான மைல் கல் அது. பின்பு தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை பெற்றேன். தொடக்கத்தில் தங்கப் பதக்கம் கைநழுவிக்கொண்டே இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு எனக்கு நிறைய தங்கப்பதக்கங்கள் கிடைத்தன.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று 210 கிலோ எடை தூக்கி சாதனை படைத்து முதலிடத்தை பெற்றேன். தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று சாதித்தேன். அதன் மூலம் நான்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. அவை என்னை மேலும் உற்சாகப்படுத்தி அதிக எடையை தூக்க வைத்தன. கடந்த மே மாதம் உடுமலைபேட்டையில் நடந்த மாநில வலுதூக்கும் போட்டியில் 220 கிலோ எடையை தூக்கி அசத்தினேன். அதே மாதம் மராட்டிய மாநிலம் சந்திராபூரில் நடந்த தேசிய அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் 242.5 எடையை தூக்க முடிந்தது. இருப்பினும் அந்த போட்டியில் இரண்டாம் இடத்தையே தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.

காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட அனுபவம் எப்படி இருந்தது?

அந்த போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்பட்டது. நான் படிக்கும் பள்ளி நிர்வாகம், முதல்வர் செல்வராஜன், தமிழ்நாடு வலுதூக்கும் சங்க செயலாளர் நாகராஜன் ஆகியோர் நான் தென் ஆப்பிரிக்கா செல்வதற்கான அனைத்து உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்தனர். அத்தகைய நல்ல உள்ளங்கள் உதவி செய்திருக்காவிட்டால், நான் சாதித்திருக்க வாய்ப்பே இல்லை.

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்றன. அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியா சார்பில் 70 பேர் பங்கேற்றனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து 8 ஆண்களும், ஒரே ஒரு பெண்ணாக நானும் கலந்து கொண்டேன். புது இடம் என்பதை மறந்துவிட்டு, மனஉறுதியுடன் போட்டியில் பங்கேற்றேன். அதனால் 8 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. தொழில்நுட்பம் சார்ந்த ‘எக்யூப்டு’ பிரிவில் 4 தங்கப்பதக்கங்களும், தொழில்நுட்பம் சாராத ‘அன்எக்யூப்டு’ பிரிவில் 4 தங்கப்பதக்கங்களும் கிடைத்தன. அத்துடன் ஒட்டுமொத்த சாம்பியனாகவும் தேர்வு செய்யப்பட்டதால் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை கிடைத்திருக் கிறது. அதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சாதனை ஒரு ‘ரிக்கார்டு பிரேக்’ என்று விளையாட்டு வல்லுனர்கள் கூறி, என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

விளையாட்டு சாதனைகளுக்கு மத்தியில் படிக்க நேரம் கிடைக்கிறதா?

படிப்பும், விளையாட்டும் எனக்கு இரு கண்கள். விளையாடும்போது விளையாட்டு, படிக்கும்போது படிப்பு என மனதை அந்தந்த துறையில் ஒருநிலைப்படுத்திவிடுவேன். 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 455 மதிப்பெண் பெற்றேன். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வேளையில் பிளஸ்-2 காலாண்டு தேர்வு தொடங்கியது. என்னால், அத்தேர்வை எழுத முடியவில்லை. தேர்வுகளை தவறவிட்டாலும் பரவாயில்லை என்று பள்ளி நிர்வாகம் என்னை ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தது. நானும் விளையாட சென்றபோது, கையுடன் புத்தகப்பையையும் கொண்டு சென்றிருந்தேன். போட்டி இல்லாத ஓய்வு நாட்களில் படித்தேன். வெற்றி பதக்கங்களுடன் சொந்த ஊர் வந்ததும் எனக்கான காலாண்டு தேர்வு பிரத்யேகமாக நடத்தப்பட்டது. அதில் சிறப்பான மதிப்பெண் பெற்றிருக்கிறேன். விளையாட்டுத்திறன் எனது கல்வித்திறனையும் மேம்படுத்தியிருக்கிறது.

உங்கள் விளையாட்டு அனுபவம் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு சொல்ல விரும்புவது?

விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் எல்லோராலும் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்கு பெற்றோரின் பங்களிப்பு முக்கியம். ஒவ்வொரு குழந்தையிடமும் வெவ்வேறு திறமை ஒளிந் திருக்கும். அதை வெளிக்கொண்டு வருவது பெற்றோர் கடமை. பெற்றோர் அளித்த ஊக்கம்தான், என்னை சிகரம் தொட வைத்தது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த ஆசிய தடகள போட்டியில் சாதனை படைத்த திருச்சி வீரருக்கு அரசு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது. அதுபோன்று பல்வேறு போட்டிகளில் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் தமிழக அரசு, வலுதூக்கும் போட்டியில் சாதனை படைப்பவர்களையும் ஊக்குவிக்கவேண்டும்.

எதிர்கால திட்டம் என்ன?

உலக சீனியர் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். 22 வயதில் அத்தகைய போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். அந்த லட்சியத்தை மனதில் கொண்டு தொடர்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். படிப்பிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. டாக்டராக ஆசைப்படுகிறேன். விளையாட்டு வீராங்கனைக்கான ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்குமென்பதால், ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப் பிலும் பங்கேற்று வருகிறேன் - என்றார்.

நிவேதாவின் தந்தை வெங்டேஸ்வரன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்று கிறார். தாயார் சித்ரா பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். தங்கை சோனாலட்சுமி 8-ம் வகுப்பு படிக்கிறாள். இவரும் அக்காள் நிவேதாவை போன்றே வலுதூக்கும் போட்டியில் சாதனை படைக்க பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

நிவேதாவின் சாதனைகள் மேலும் வலுவாகட்டும்! 

Next Story