செய்தி தரும் சேதி - சரித்திரம் எனும் விசித்திரம்


செய்தி தரும் சேதி  - சரித்திரம் எனும் விசித்திரம்
x
தினத்தந்தி 22 Oct 2017 2:29 PM IST (Updated: 22 Oct 2017 2:29 PM IST)
t-max-icont-min-icon

வரலாறு நெடும்புனலாக ஓடும் நதி. அதில் எங்கு சுழல் என்பதும், எப்போது வெள்ளம் அதிகரிக்கும் என்பதும் நமக்குப் புலப்படாத புதிர்கள்.

ரலாறு நெடும்புனலாக ஓடும் நதி. அதில் எங்கு சுழல் என்பதும், எப்போது வெள்ளம் அதிகரிக்கும் என்பதும் நமக்குப் புலப்படாத புதிர்கள்.

சில மன்னர்களின் செயல்கள் விசித்திரமாக இருந்திருக்கின்றன. யாருடன் கை குலுக்கினாலும் கைகளை உடனே வாசனைத் திரவியம் கலந்த நீரில் கைகழுவிய மன்னர்கள் இருந்தார்கள். பிரிய நாய்க்கு பிரசித்தியாக விவாகம் செய்து வைத்த நவாபுகள் இருந்தார்கள். உள்ளாடை நாடாவை இறுக்கிக்கட்ட உதவியாளர்கள் வைத்திருந்த மன்னர்கள் இருந்தார்கள் என்று ‘அகம் புறம் அந்தப்புரம்’ நூலில் முகில் குறிப்பிடுகிறார்.

முகமது ஷா ரங்கீலா யானைச் சண்டையை பெண்கள் உடையை அணிந்து கொண்டு பார்ப்பார் என்று அருந்ததி ராய் எழுதிய The Ministry of Utmost Happiness நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நூர்ஜஹானின் மகள் லாட்லியை மணந்த ஜகாங்கீரின் மகன் ஷேரியர் ஷாஜகானிடமிருந்து தப்பிக்க பெண்கள் வேடமணிந்து அவர் களோடு நடனமாடும்போது மாட்டிக்கொண்டார்.

நிச்சயமற்றவை பதவியும், புகழும் என்பதையே வரலாறு வலி யுறுத்துகிறது. முகலாயப் பரம்பரைக்கும் இத்தகைய விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. ‘மொகல்’ என்பது ‘மங்கோல்’ என்பதன் திரிபு. பாபர்- செங்கிஸ்கான் மரபிலும், தைமூர் மரபிலும் வந்தவர்.

சில நேரங்களில் பெயருக்கும் வாழ்வுக்கும் சம்பந்தமிருப்பதில்லை. ‘ஹுமாயூன்’ என்ற பெயருக்கு ‘அதிர்ஷ்டக்காரன்’ என்று பொருள். அவர் தம்முடைய கனவுகளில் விழித்திருந்தபோது இருந்ததைவிட அதிகம் விழிப்புடனிருந்தார். கனவாகத் தொடங்கிய அவர் வாழ்வு கெட்ட சொப்பனமாக ஆனது.

மீர்ஸா ஹைதர் ‘ஹுமாயூனைப் போல இயற்கை ஆற்றலும், பண்பும் நிறைந்த ஒருவரைப் பார்க்க முடியாது’ என்று எழுதுகிறார். ‘அவர் தேர்ந்த கணித வல்லுநர். அவர் வானவியலிலும், ஜோதிடத்திலும் நிகரற்றவர்’ என அவர் அரசவையிலிருந்த பதானி குறிப்பிடுகிறார். அவர் அளவுக்கதிகமாக ஓபியம் அருந்தியது பொதுமக்களுடைய திண்ணைப் பேச்சாக இருந்தது.

அவர் மன்னரானதும் முகலாயப் படையின் கட்டுப்பாடு சிதைந்து போனதாக அபுல் பாஸல் எழுதுகிறார்.

ஹுமாயூன் ஜோதிடத்திற்கு அப்படியொரு போதைக்குள்ளானவர். செவ்வாய்க்கிழமையன்று அக்கிரகத்திற்குரிய சிவப்பு உடையுடன் சிம்மாசனத்தில் அமர்வார். அவர் அரசாங்கத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாளும், கிரகங்களுமே தீர்மானித்தன.

ஹுமாயூன் புத்திசாலி. அக் காலத்திலேயே நகரும் பாலத்தை உருவாக்கினார். பாலத்தை நகரச் செய்து அவர் நகராமல் இருந்ததே பிரச்சினை.

ஹுமாயூன் 1531-ம் ஆண்டு முகமது லோடியோடு மோதும்போதே ஷேர்கான் என்கிற ஆப்கன் படைத்தலைவனோடு மோதி அவரைப் பணிய வைத்தார். ஆனால் ஷேர்கான் அமைதியாக யாருக்கும் தெரியாமல், செங்கல் மீது செங்கல் வைத்து எழுப்பப்படும் கோட்டையாகத் தன்னை வளர்த்துக்கொண்டார். அவருடைய பார்வை மயிலாசனத்தின் மீது இருந்தது. ஆனால் அதை அவர் ஒருவரிடம்கூட மூச்சுவிடவில்லை.

ஹுமாயூன், ஷேர்கானை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ‘விஷப்பாம்பை பாதி அடித்து விட்டுவிடக்கூடாது. அதன் தலையை முழுவதுமாக நசுக்க வேண்டும்’ என கவுடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடுகிறார்.

ஷேர்கான் தன்னுடைய எல்லையை வங்காளம் வரை விரிவுபடுத்தியபோது எதிரி மன்னனாக பரிணாமவளர்ச்சி பெற்று முகலாயப் பேரரசிற்கு சவால் விட்டார். அப்போதுதான் ஹுமாயூனுக்கு உண்மை உரைத்தது. 1537-ம் ஆண்டு ஜூலை மாதம் படைகளைத் திரட்டிக்கொண்டு பயணப்பட்டார். ஹுமாயூன் நேராகச் சென்று வங்காளத்தில் ஷேர்கானை முறியடிப்பதற்குப் பதிலாக வழியிலிருந்த ‘சூனார்’ என்ற கோட்டையைத் தாக்கினார். அவர் வங்காளத்திற்குப் போவதற்குள் அது ஷேர்கானின் இறுகிய பிடிக்குள் சிக்கிக்கொண்டது. பீகாருக்குச் சென்றிருந்த ஷேர்கான் வங்காளத்திற்குத் திரும்பினார். வாங்காளத் தலைநகரில் ‘ஷெர்ஷா’ என்று அவருடைய பெயரை மாற்றிக்கொண்டார். ஹுமாயூன், கெளர் என்ற வங்காளத் தலைநகரை நோக்கி விரையும்போது கொட்டித் தீர்த்த பருவமழை பயணத்தைப் பாதித்தது.

ஷெர்ஷா பீகாருக்கும் வங்காளத்திற்குமுள்ள வழித்தடங்களையும், கணவாய்களையும் மறித்து ஹுமாயூனுடைய படைகளுக்கு உணவுப்பொருட்களோ, தகவலோ சென்று சேராமல் பார்த்துக்கொண்டார். போர் உத்திகளில் முக்கியமானது அது. வங்காளத்திலேயே ஹுமாயூன் தீர்த்துக்கட்டப்படுவார் என்ற எண்ணத்தில் அவருடைய சகோதரர்கள் அவரைவிட்டு விலகத் தொடங்கினார்கள்.

ஷெர்ஷா ஹுமாயூனுடன் நேராக மோதி சேதங்களைச் சந்திக்க விரும்பவில்லை. அவர் ஜான்பூரிலிருந்து பின்வாங்கினார். கங்கையின் கரையிலிருந்த ஹுமாயூன் ஆக்ராவிற்குச் செல்லத் தொடங்கினார். வழியெங்கும் அவரைப் பின்தொடர்ந்து மோப்பம் பிடித்த ஆப்கன் ஒற்றர்கள் ஒவ்வோர் அசைவையும் கண் காணித்தனர்.

முகலாயப் படையின் ஊக்கமும், உற்சாகமும் குறைந்திருப்பதையும், ஒழுங்கீனம் ஏற்பட்டிருப்பதையும் அறிந்த ஷெர்ஷா தன்னுடைய போர்முறையை மாற்றி அவர்களோடு நேரடியாக மோதுவதென்று முடிவெடுத்தார். தெற்கு பீகாரிலிருந்து புறப்பட அவர் எதிர்பாராத தருணத்தில் முகலாயர் முன்பு வந்து நின்றார்.

இரண்டு படைகளும் ‘சௌஸா’வை ஒரே நேரத்தில் வந்தடைந்தன. ஷெர்ஷா ஆக்ராவிற்கான வழியை அடைத்தபடி முற்றுகையிட்டார். சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என ஹுமாயூன் தரப்பில் கருத்து வேறுபாடுகள். உடனடியாகத் தாக்கித் தகர்க்க வேண்டு மென ஒரு சாரார் ஆலோசனை சொன்னார்கள். மற்றொரு தரப்போ முகலாயர்கள் வழக்கமாகச் செய்யும் சூழ்ந்து தாக்குகிற உத்தியைப் பயன்படுத்துமாறு சொன்னார்கள்.

‘அவசரமோ, பதற்றமோ தேவையில்லை’ என அவர்கள் சொன்ன ஆலோசனை ஹுமாயூனுக்குப் பிடித்திருந்தது. அவர் ‘கர்மனஸா’வைக் கடந்து படைகளுடன் முகாமிட்டார். இரண்டு படைகளும் இரண்டு மாதங்கள் ஒன்றையொன்று வெறித்துப் பார்த்தவாறு அங்கேயே இருந்தன. அவ்வப்போது சின்னச்சின்ன தகராறுகள். பெரிய சேதாரம் எதுவுமில்லை. சின்ன தகராறுகள் எப்போதுமே முகலாயர்களுக்கு சாதகமாகவே இருந்தன. முகலாயப் படையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால் அவர்களுடைய தன்னம்பிக்கை குலைந்திருந்தது.

ஆக்ராவிலிருந்து ஹுமாயூன் சகோதரர்கள் படையுடன் வருவதாகத் தகவல் கிட்டியது. ஷெர்ஷா இரண்டு பக்கமும் முகலாயப் படைகளிடம் சிக்கிக்கொள்கிற சிக்கல் இருந்தது. ஆனால் அவர்களோ சில நாட்கள் முன்னேறிய பிறகு ஆக்ராவிற்கே திரும்பி விட்டார்கள். அதற்குள் கோடை முடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. ஷெர்ஷாவிற்கு அது பெரும் பிரச்சினை. அவர் முகாமிட்டிருந்த நிலப்பரப்பு மழைக்கு சாதகமாக இல்லை. அவருடைய முகாமில் வெள்ளம் சூழ்ந்தது. அந்த நேரத்தில் படைகளோடு மோதியிருந்தால் ஷெர்ஷாவை நசுக்கியிருக்கலாம். ஆனால் அந்த தருணத்தையும் ஹுமாயூன் தவற விட்டுவிட்டார். அவர் ஷெர்ஷாவுடன் சமரசம் செய்ய முல்லா முகமது பர்கீஜ் என்பவரை அனுப்பினார். ஷெர்ஷா போக்குக் காட்டினார்.

முகலாயப் படை பலவீனமாக இருப்பதையும், வெள்ளைக்கொடி ஏந்தத் தயாராக இருப்பதையும் உணர்ந்த ஷெர்ஷா தாக்க முடி வெடுத்தார். நள்ளிரவில் படைகளோடு அங்கிருந்து கிளம்பிச் செல்வதைப்போல போக்குக்காட்டிய அவர் திரும்பி வந்தார். அரைகுறைத் தூக்கத்திலிருந்த முகலாயப் படையை ஆப்கன் படை துவம்சம் செய்தது.

ஹுமாயூன் தூக்கத்திலிருந்து எழுந்து, குதிரையின் மீது ஏறி அமர்ந்து, படைகளையெல்லாம் திரட்ட முயன்றார். ஆனால் அதற்குள் போர் முடிந்துவிட்டது.

அண்மையில் நம் பிரதமர் அவருடைய பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றிற்குச் சென்றார். அந்தக் கிராமத்தைப்பற்றிய கதையொன்றுண்டு. ‘ஷஹன்ஷாபுர்’ என்ற அந்த கிராமத்தில் ஷெர்ஷாவிடம் நடந்த போரில் தப்பிய ஹுமாயூன் 450 ஆண்டு களுக்கு முன்பு தஞ்சமடைந்ததாகவும், அதுவரை ‘காலுக்பூர்’ என அழைக்கப்பட்ட அந்த கிராமம் ஷஹன்ஷாபுர் என்று பெயர் பெற்றதாகவும் கர்ணவழித் தகவல்கள் உண்டு.

மாமன்னராக இருந்த ஹுமாயூன் தவறான அணுகுமுறைகளாலும், மோசமான யுக்திகளினாலும் போரில் அது தொடங்குவதற்கு முன்பே தோற்று கங்கை நதியைக் கடந்து அந்த அமைதியான கிராமத்தை வந்தடைந்தாராம். அப்போது வயதான பெண்ணொருத்தி வந்திருப்பவர் யாரென்பதுகூடத் தெரியாமல் அவருக்கு அடைக்கலம் கொடுத்தாளாம். ஹுமாயூனுடைய சிப்பாய்கள் சக்கரவர்த்தி அங்கு தங்கியிருந்தார் என்பதை சில ஆண்டுகளுக்குப் பிறகு தேடி வந்தபோதுதான், இரவு தன் குடிசையில் தங்கிய விருந்தினர் யார்? என்பது அந்து மூதாட்டிக்குத் தெரிந்ததாம். ஹுமாயூன் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும் அந்த மூதாட்டிக்கு நன்றி சொல்ல அவருடைய படைவீரர்களை அங்கு அனுப்பினாராம். ஆனால் அதற்குள் அந்தப் பெண் இறந்து போயிருந்தாளாம்.

வரலாற்றில் பதிவாகியிருக்கும் சுவாரசியமான செய்தியொன்று உண்டு. பாபர் கட்டுமஸ்தான உடலுடன் இருந்தவர். நதிகளையெல்லாம் நீந்திக் கடந்தவர். கங்கை முழு வீச்சிலிருக்கும்போது அதை நீந்திக் கடந்து உரிமையை நிரூபித்தவர். ஹுமாயூன் கங்கையைக் கடக்கும்போது குதிரையிலிருந்து விழுந்தவர். மூழ்க விருந்த நேரத்தில் தண்ணீரைச் சுமக்கும் நிஜாம் என்பவர் அவருடைய நீர்ப்பையை ஊதி அவர் ஆற்றைக் கடக்க உதவினார்.

கரையை அடைந்த அவர் ‘நீ ஒரு நாள் என் சிம்மாசனத்தில் அமர்வாய்’ என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினார். ஹுமாயூன் ஆக்ராவை அடைந்ததும் நிஜாம் அரண்மனைக்குக்குச் சென்று மன்னர் முன்பு ஆஜரானார். ஹுமாயூன் சத்தியத்தைக் காப்பாற்றினார்.

சில மணி நேரம் சிம்மாசனத்தில் அமர்ந்த அந்த நிஜாம் அதற்குள் குடும்பத்தை வளப்படுத்திக்கொள்ளும் ஆணைகளை வரிசையாகப் பிறப்பித்துக்கொண்டார்.

பிரதம மந்திரி அங்கு கால்நடை மருத்துவ நல முகாம் ஒன்றைத் தொடங்கி வைத்திருக்கிறார். அத்திட்டத்தில் கால்நடைகளுக்கான ஆரோக்கியம் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆட்சியாளருக்கு அடைக்கலம் கொடுத்த ஊர் இன்றைய ஆட்சியாளரின் அரவணைப்பில் வருவதே, ‘வரலாறு அடிக்கடி திரும்பும் நிகழ்வு’ என்கிற செய்தி தரும் சேதி.

(செய்தி தொடரும்) 

Next Story