நாலச்சோப்ராவில் 4 ரூபாய் தகராறில் ஒருவர் குத்திக்கொலை 2 பேர் கைது
நாலச்சோப்ராவில் 4 ரூபாய் தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் விரார் கிழக்கில் உள்ள டோங்கிரிபாடாவை சேர்ந்தவர் ரவி(வயது40). இவர் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் நாலச்சோப்ரா துலிஞ்ச் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள ராஜ் என்பவரது கடையில் சென்று ஆம்லெட் சாப்பிட்டார்.
இதற்காக அவரிடம் ரூ.24 தரும்படி ராஜ் கேட்டார். ஆனால் அவர் ரூ.20 மட்டும் கொடுத்தார். மீதி 4 ரூபாய் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. இதனால் கோபம் அடைந்த ரவி தன்னிடம் இருந்த 5 ரூபாயை கொடுத்துவிட்டு ராஜை திட்டினார்.
இது ராஜிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் தனது நண்பர்கள் மகேஷ், சோனு ஆகியோரை அழைத்து ரவியிடம் சண்டையிட்டார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ரவியை குத்தினர். இதில் படுகாயம் அடைந்த ரவி சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜ், மகேஷ் இருவரையும் கைது செய்தனர். மேலும் சோனுவை வலைவீசி தேடிவருகின்றனர்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக துலிஞ்ச் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் 3 பேரை பால்கர் போலீஸ் சூப்பிரண்டு மஞ்சுநாத் சிங்கே பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.