புனேயில் பயங்கரம் 2½ வயது சிறுமி கடத்தி கொலை போலீஸ் விசாரணை
புனேயில் 2½ வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டாள். அவள் கற்பழித்து கொல்லப்பட்டாளா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புனே,
புனே சின்ஹாகாட் சாலையில் உள்ள தயாரி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் சிவ்கனே. இவருக்கு 2½ வயதில் ஸ்ருதி என்ற மகள் இருந்தாள். நேற்றுமுன்தினம் இரவு சிறுமி ஸ்ருதி திடீரென காணாமல் போனாள். கலக்கம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தனர். இருப்பினும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சின்ஹாகாட் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை விஜய் சிவ்கனேயின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அதே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் அருகே சிறுமி ஒருத்தி பிணமாக கிடந்தாள். இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றினர்.
விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டது, காணாமல் போன சிறுமி ஸ்ருதி என்பது தெரியவந்தது. அவளது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் அவளது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவள் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அவள் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அது பற்றிய விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கொலையாளி யார்? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
2½ வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் தயாரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.