நிலக்கரி வாங்கியதில் செய்த தவறுக்காக நான் விளக்கம் அளிக்க தேவையில்லை முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி


நிலக்கரி வாங்கியதில் செய்த தவறுக்காக நான் விளக்கம் அளிக்க தேவையில்லை முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2017 3:46 AM IST (Updated: 23 Oct 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கரி வாங்கியதில் செய்த தவறுக்காக தனியார் நிறுவனம் சார்பில் ரூ.477 கோடியை,

மங்களூரு,

கர்நாடக மின்சார கழகம் மத்திய அரசுக்கு அபராதமாக செலுத்தியதாக எடியூரப்பா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு நான் விளக்கம் அளிக்க தேவையில்லை என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் சட்டமன்ற தொகுதியில் ரூ.149.29 கோடி செலவில் மினிவிதான சவுதா, அரசு பஸ் நிலையம், 100 படுக்கைகள் கொண்ட புதிய ஆஸ்பத்திரி, மெஸ்காம் அலுவலகம், குடிநீர் திட்டம், பூங்கா, போக்குவரத்து கழக அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான தொடக்க விழாவில் கலந்து கொள்ளவும், ரூ.104.21 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளவும் முதல்–மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வருகை தந்தார்.

மங்களூரு பஜ்பே விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியும், தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ரமாநாத் ராய், மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில், போலீஸ் கமி‌ஷனர் சுரேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதீர்குமார் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மாநிலத்தில் உள்ள மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிகளை வாங்க எம்டா என்ற தனியார் நிறுவனத்துடன் கர்நாடக மின்சார கழகம் ஒப்பந்தம் செய்து உள்ளது. எம்டா நிறுவனம் நிலக்கரி வாங்கியதில் செய்த தவறுக்காக மாநில அரசு ரூ.477 கோடி அபராதத்தை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி மத்திய அரசுக்கு செலுத்தி உள்ளதாகவும், இதன் மூலம் அரசின் கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்த வி‌ஷயத்தில் நானும், மந்திரி டி.கே.சிவக்குமாரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த வி‌ஷயத்தை கையில் எடுத்து கொண்டு எடியூரப்பா தேவையில்லாமல் அரசியல் செய்து வருகிறார். எடியூரப்பா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட சில மந்திரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். அதனால் இதுகுறித்து நான் விளக்கம் அளிக்க தேவையில்லை.

மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு திப்புவின் வரலாறு தெரியவில்லை. வருகிற 10–ந் தேதி கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா கண்டிப்பாக கொண்டாடப்படும்.

திப்பு ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆண்டுதோறும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு திப்பு ஜெயந்தி விழாவில் எனது பெயர் இடம்பெறகூடாது என்று அனந்தகுமார் ஹெக்டே எம்.பி. கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாங்கள் வழக்கம் போல மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பிதழ் வழங்குவோம். விழாவில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவர்களின் விருப்பம். யார் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி திப்பு ஜெயந்தி விழா நடக்கும்.

தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அதை தலைவர்கள் மறுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க மங்களூருவுக்கு விமானம் மூலம் வருகை தந்த முதல்–மந்திரி சித்தராமையாவை வரவேற்க, தலைமை கொறடா ஐவன் டிசோசா தலைமையில் ஒரு பிரிவினரும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மிதுன்ராய் தலைமையில் ஒரு பிரிவினரும் முண்டியடித்து கொண்டு சென்றனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முதல்–மந்திரி சித்தராமையாவின் முன்னிலையில் காங்கிரஸ் இருபிரிவினரும் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் இருபிரிவை சேர்ந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஐவன் டிசோசா, சித்தராமையாவின் அருகே சென்றனர். அப்போது அவரை முன்னாள் மந்திரியும், தற்போதைய மூடுபித்ரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அபயசந்திர ஜெயின் தடுத்து நிறுத்தினார். ஆனால் இதை எதுவும் கண்டுகொள்ளாமல் முதல்–மந்திரி சித்தராமையா கார் மூலம் பண்ட்வாலுக்கு சென்று விட்டார். இந்த மோதலால் காங்கிரசில் உட்கட்சி பூசல் இருப்பது தெளிவாக தெரிந்தது.

பண்ட்வாலில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மினி விதான சவுதாவை திறந்து வைக்க முதல்–மந்திரி சித்தராமையா நேற்று வருகை தந்தார். அவர் மினி விதான சவுதாக்கு வருகை தந்ததும் அவரை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மினிவிதான சவுதாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது மினிவிதான சவுதாவில் பிரதான நுழைவு வாயிலின் 2 கதவுகளும் உடைந்தன. இதனை தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின் சித்தராமையா மினி விதான சவுதாவை திறந்து வைத்தார். இந்த சம்பவத்தால் மினிவிதான சவுதாவின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story