மக்களிடையே பிளவை ஏற்படுத்த சித்தராமையா முயற்சி பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் பேட்டி


மக்களிடையே பிளவை ஏற்படுத்த சித்தராமையா முயற்சி பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2017 10:28 PM GMT (Updated: 2017-10-23T03:58:12+05:30)

காங்கிரஸ் அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்றும், மக்களிடையே பிளவை ஏற்படுத்த சித்தராமையா முயற்சிப்பதாகவும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. மாநில அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. முதல்–மந்திரி சித்தராமையாவும், பிற மந்திரிகளும் கமி‌ஷன் வாங்குவதில் வல்லவர்களாக உள்ளனர். மக்கள் எதிர்ப்பையும் மீறி திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடுவதில் சித்தராமையா உறுதியாக உள்ளார். சாதி பிரச்சினைகளை தூண்டிவிடுவதுடன் மக்களிடையே பிளவை ஏற்படுத்த சித்தராமையா முயற்சித்து வருகிறார்.

சட்டசபை தேர்தலையொட்டி ‘நவ கர்நாடகத்தை உருவாக்க பரிவர்த்தனா யாத்திரை‘ என்ற பிரசார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசியலில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு ஆரம்பமாகும். புதிய மாநிலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த யாத்திரையை பா.ஜனதா தொடங்கியுள்ளது. பா.ஜனதா கட்சி தனிப்பட்ட ஒரு சமுதாயம், சாதிக்கு மட்டும் சேர்ந்தது இல்லை என்பதை நிரூபித்து வருகிறோம்.

கர்நாடகத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்தார்கள். அதனை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. பா.ஜனதா ஆட்சியில், விவசாயிகள் கடன் வாங்காமல் தங்களது சொந்த காலில் நிற்க தேவையான திட்டங்கள் வகுக்கப்படும். அதற்கான மாற்றங்கள் கொண்டு வரப்படும். பா.ஜனதாவுக்குள் உட்கட்சி மோதல் எதுவும் இல்லை. தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் இல்லை. மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் ஒற்றுமையாக இருந்து வருகிறோம்.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை ஒவ்வொன்றாக பா.ஜனதா வெளியிட்டு வருகிறது. அதுபோல, நவம்பர் 2–ந் தேதி முதல் தொடங்கும் பிரசார கூட்டங்களில் கர்நாடக அரசின் ஊழல்கள், பிற முறைகேடுகளை பா.ஜனதா வெளியிடும். சித்தராமையா தலைமையில் நடைபெறும் ஊழல் ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்ப தயாராகி விட்டார்கள்.


Next Story