சொர்ணாவூர் அணையில் இருந்து பாகூர் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது
சொர்ணாவூர் அணையில் இருந்து பாகூர் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. அதனால் ஏரி நிரம்பவது தாமதமாகும் என்று அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாகூர்,
புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 24 ஏரிகள் உள்ளன. இதில் பாகூர் ஏரி புதுச்சேரி மாநிலத்திலேயே 2–வது பெரிய ஏரியாகும். இந்த ஏரி மொத்தம் 3.60 மீட்டர் உயரமும், 193.50 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். பாகூர் ஏரி மூலம் பாகூர், அரங்கனூர், சேலியமேடு, குடியிருப்புபாளையம், நிர்ணயப்பட்டு, ஆதிங்கப்பட்டு, குருவிநத்தம் மற்றும் தமிழக பகுதியில் உள்ள கரைமேடு உள்பட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை பெய்யாததால் பாகூர் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் ஏரி நிரம்பாமல் இருந்தது. அதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தமிழக பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்தின் சாத்தனூர் அணை நிரம்பியது. அதனால் அந்த அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக புதுச்சேரி மாநிலம் சொர்ணாவூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அந்த அணையும் நிரம்பியது.
இந்த அணையில் இருந்து உபரி நீர் பங்காரு வாய்க்கால் வழியாக வெளியேற்றப்பட்டது. அந்த வாய்க்காலில் வரும் தண்ணீர்தான் பாகூர் ஏரிக்கு நீராதாரமாகும். பங்காரு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாகூர் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக பாகூர் ஏரியின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வந்தது.
இதேபோல் பங்காரு வாய்க்காலில் வரும் தண்ணீர் மூலம் கரையாம்புத்தூர் ஏரி, பனையடிக்குப்பம் ஏரி, கடுவனூர் ஏரி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து அந்த ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில் மழை பெய்வது குறைந்ததால் தென் பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு குறைந்து அதன் தொடர்ச்சியாக சொர்ணாவூர் படுகை அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டது. அதனால் பங்காரு வாய்க்காலில் வெளியேற்றப்படும் தண்ணீரும் குறைந்துவிட்டது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, தற்போது பாகூர் ஏரியில் 1.94 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் மூலம் பாகூர் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு தற்போது குறையத்தொடங்கி உள்ளது. சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததுதான் அதற்கு காரணமாகும். அதன் காரணமாக பாகூர் ஏரி முழுவதும் நிரம்பும் வாய்ப்பு குறைந்துவிட்டது. மீண்டும் மழை பெய்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே பாகூர் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.