வளசரவாக்கத்தில் டி.வி. பார்ப்பதில் தகராறு; சினிமா உதவி இயக்குனர் கொலை


வளசரவாக்கத்தில் டி.வி. பார்ப்பதில் தகராறு; சினிமா உதவி இயக்குனர் கொலை
x
தினத்தந்தி 27 Oct 2017 11:30 PM GMT (Updated: 27 Oct 2017 7:38 PM GMT)

டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் சினிமா உதவி இயக்குனர், கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு உதவி இயக்குனர் போலீசில் சரண் அடைந்தார்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், கைக்கான்குப்பம் வ.உ.சி. தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அகில்கண்ணன்(வயது 36). திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த இவர், சினிமாத்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

இவர், விஜய் ஆண்டனி நடித்து வெளிவர உள்ள ‘அண்ணாதுரை’ என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து உள்ளார். இவருடன் கார்த்திகேயன் (32) என்ற மற்றொரு உதவி இயக்குனர் உள்பட மேலும் சில உதவி இயக்குனர்கள் என மொத்தம் 6 பேர் ஒரே வீட்டில் தங்கி இருந்தனர்.

வாக்குவாதம்

நேற்று முன்தினம் இரவு அகில்கண்ணன் வீட்டில் போதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது கார்த்திகேயன் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். டி.வி. சத்தம் அதிகமாக இருப்பதால் தான் தூங்குவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி, டி.வி. சத்தத்தை குறைத்து வைக்குமாறு அகில்கண்ணன் கூறினார்.

ஆனால் கார்த்திகேயன் அதை கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அகில்கண்ணன், படுக்கையில் இருந்து எழுந்து வந்து டி.வி.யை ‘ஆப்’ செய்துவிட்டு மீண்டும் போய் படுத்துக்கொண்டார். உடனே கார்த்திகேயன், மீண்டும் டி.வி.யை ‘ஆன்’ செய்து அதிக சத்தமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது அகில்கண்ணனை, கார்த்திகேயன் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த அகில்கண்ணனின் தலையின் பின்பகுதியில் சுவரில் பதிக்கப்பட்டு இருந்த ‘டைல்ஸ்’ கல்லின் கூர்மையான பகுதி குத்தியதில் காயம் அடைந்து ரத்தம் வடிந்தது.

இறந்து கிடந்தார்

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், உடனடியாக அகில்கண்ணனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர், தலையில் அடிபட்டு இருப்பதால் ‘ஸ்கேன்’ எடுத்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் காலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று அகில்கண்ணனை வீட்டுக்கு அழைத்து வந்து படுக்க வைத்துவிட்டு, தானும் சென்று படுத்து தூங்கி விட்டார்.

நேற்று காலையில் கார்த்திகேயன் எழுந்து பார்த்துபோது அகில்கண்ணன் உடல் அசைவற்று கிடந்தார். அவர் படுக்கையிலேயே பரிதாபமாக இறந்துவிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சரண் அடைந்தார்

இதனால் பயந்து போன கார்த்திகேயன், கே.கே.நகர் போலீஸ் நிலையம் சென்று நடந்தவற்றை கூறி சரண் அடைந்தார். சம்பவம் நடந்த பகுதி வளசரவாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த உதவி இயக்குனர் அகில்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார்த்திகேயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story