உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துடன் பேனர் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு


உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துடன் பேனர் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 27 Oct 2017 11:45 PM GMT (Updated: 2017-10-28T01:25:13+05:30)

உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துடன் கூடிய பேனர்கள் பொது இடங்களில் வைப்பதற்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

சென்னை,

உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர்கள், சுவர் விளம்பரங்கள் போன்றவற்றுக்கு தடைவிதித்து ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்றுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள ‘உயிருடன் இருப்பவர்கள்’ என்ற வார்த்தையை மட்டுமாவது நீக்கவேண்டும்’ என்றார்.

சட்டவிரோத பேனர்கள்

அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் உள்ளிட்ட விளம்பர பலகைகளுக்கு எதிராக ஐகோர்ட்டு 2011-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தும் என்று இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறோம். ஆனால், தனி நீதிபதி தடை விதித்ததும் 2 நாட்களுக்கு கூட அரசால் பொறுத்திருக்க முடியவில்லை.

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அதிகாரிகள் அகற்றிவிடுவதாக கூறுகிறீர்கள். ஆனால், எங்கள் வீட்டுக்கு முன்பே சட்டவிரோத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பேனரை அகற்றினால், மறுநாளே இன்னொரு பேனரை வைத்துவிடுகின்றனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற நிலை வந்திருக்காது.

தடையை நீக்க முடியாது

நாங்களும் தடாலடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்த போதுமான காலஅவகாசம் அளிக்கிறோம். அதன்பிறகும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதால் தான் ஐகோர்ட்டு தலையிட வேண்டியுள்ளது.

அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே திட்டங்களை கொண்டுசேர்க்கும் பாலமாக உள்ள தாசில்தார்களே பெரும்பாலான இடங்களில் கிடையாது. சென்னை மாநகராட்சியிலும் போதுமான பணியாளர்கள் இல்லை. அவற்றை எல்லாம் தீர்க்க அரசுதான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது.

இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை 30-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

Next Story