கேளம்பாக்கத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கேளம்பாக்கத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2017 11:45 PM GMT (Updated: 27 Oct 2017 8:11 PM GMT)

அண்ணா பல்கலைக்கழக தேர்வை எழுத விடாமல் தடுத்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கேளம்பாக்கத்தில் மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

திருப்போரூர்

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே எஸ்.எம்.கே.போம்ரா என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் 30 பேரின் வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக காரணம் கூறி அவர்களை அண்ணாபல்கலைக்கழக செமஸ்டர் தேர்வை எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததோடு, அவர்களுக்கு தேர்வுக்கு செல்லும் ஹால் டிக்கெட்டையும் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து மாணவர்கள் கேளம்பாக்கம் போலீசில் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில் மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்துடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் 20 பேருக்கு பல்கலைக்கழக தேர்வு எழுத ஹால் டிக்கெட் கொடுத்தது.

அவர்கள் தேர்வு முடிந்து வெளியே வந்தபோது, 20 பேரில் மேலும் 8 மாணவர்களின் வருகைப்பதிவு குறைவாக இருப்பதாக காரணம் கூறி ஹால் டிக்கெட்டை வாங்கி கொண்டு கல்லூரி நிர்வாகம் அவர்களை வெளியே அனுப்பியதாக தெரிகிறது.

மாணவர்கள் போராட்டம்

இதற்கு கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் 200 பேர் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை மாலை வரை நடந்தது. ஆனாலும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 8 கல்லூரி பஸ்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

போலீஸ் சமரசம்

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கல்லூரி வருகை பதிவேடு முறையாக இருந்தால் இன்று(சனிக்கிழமை) அனைவரும் தேர்வு எழுதலாம் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story