கவர்னர் மீது பிரதமரிடம் நாராயணசாமி புகார்


கவர்னர் மீது பிரதமரிடம்  நாராயணசாமி புகார்
x
தினத்தந்தி 27 Oct 2017 11:30 PM GMT (Updated: 27 Oct 2017 9:50 PM GMT)

கவர்னர் கிரண்பெடி மீது புகார் தெரிவித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு நாராயணசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையேயான மோதல் காரணமாக யார் செல்வதை கேட்டு நடப்பது என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் பல பணிகள் கிடப்பில் கிடக்கின்றன. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளி மாநிலங்களுக்கு இடமாறுதல் கேட்டு சென்று விடலாமா? என்று யோசித்து வருகிறார்கள்.

உள்ளூர் அதிகாரிகளும் அதிருப்தியான நிலையில் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தங்கள் மீது இன்னாருடைய ஆதரவாளர் என்ற முத்திரை விழுந்து விடக் கூடாது என்பதற்காக கவர்னர், முதல்- அமைச்சர் ஆகிய இருவரது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை அதிகாரிகள் தவிர்த்து வருகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு, தூய்மைப்பணி என ஈடுபட்டு வருகிறார். விடுமுறை நாட் களையும் அவர் விட்டு வைப்பதில்லை. காலை 6 மணிக்கே அதிகாரிகளை தன்னுடன் வருமாறு அவர் அழைப்பதால் அதிகாரிகள் மிகவும் சிரமமடைந்துள்ளனர்.

கவர்னர் உத்தரவு

தற்போது அதிகாரிகள் பலர் கவர்னர் கிரண்பெடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகின்றனர். இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி கடந்த 23-ந்தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதில், பொதுநிகழ்ச்சிகளில் அதிகாரிகள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அதிகாரிகள் கலந்துகொள்ள முடியாவிட்டால் அதற்கான காரணத்தை கடிதம் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

பிரதமரிடம் புகார்

கவர்னரின் இந்த உத்தரவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசின் உத்தரவுகள் அனைத்தும் பொது நிர்வாகத்துறை மூலம்தான் பிறப்பிக்கப்பட வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பெடி, நிர்வாகத்தை செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் செயல்படுகிறார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி நேரடியாக உத்தரவுகளை பிறப்பிக்கிறார். இதை தாங்கள் தடுத்து நிறுத்த அறிவுறுத்த வேண்டும்.

அதிகார போக்கு

புதுவை அரசு அதிகாரிகள் சுதந்திரதினம், குடியரசு தினம், புதுவை விடுதலைநாள் உள்ளிட்ட விழாக்களில் தவறாமல் கலந்துகொள்கின்றனர். கவர்னர், முதல்-அமைச்சரின் விழாக்கள் நாள்தோறும் பல நடைபெறும். இந்த விழாக் களில் எல்லாம் அவர்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அதிகாரிகள் விழாக்களில் கலந்துகொண்டு முக்கிய பிரமுகர்களுக்கு சல்யூட் அடித்து வழியனுப்பி வைத்துவிட்டு தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ள நேரமிருக்காது. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படும்.

கவர்னர் கிரண்பெடி தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு அவரது அதிகாரப் போக்கையே காட்டுகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு கவர்னருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். 

Next Story