நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி நூதன போராட்டம்


நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2017 8:15 AM GMT (Updated: 28 Oct 2017 8:15 AM GMT)

நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயி, கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு கோஷமிட்டு, நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜசேகர், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) மயில்வாகனன், கூட்டுறவு துறை இணை பதிவாளர் ஜெயம், உதவி கலெக்டர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் கோபி கணேசன்:- மேட்டூர் அணையில் இருந்து விவசாயிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறக்கவேண்டும். விவசாயிகளுக்கு ஜிப்சம் உரத்தை தட்டுப்பாடின்றி மானிய விலையில் வழங்கவேண்டும்.

பிரபாகரன்:- விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மூலம் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மழைகாலத்திற்கு முன்பு அதனை சரிசெய்ய வேண்டும்.

முஜிபுர்:- கோவில் பத்து கிராமத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நவீன சேமிப்பு உணவு தானிய கிடங்கை உடனடியாக திறக்க வேண்டும்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுசெயலாளர் தனபாலன்:- நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு கோஷம் எழுப்பினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள், விவசாயியான தனபாலனிடம் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதிக்குள் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். பின்னர் அவர் கழுத்தில் இருந்து கயிற்றை எடுத்தார்.

இவ்வாறு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து கூறினர்.

Next Story