கடைகளில் கொசு உற்பத்தி ஆவதாக கூறி அபராதம் விதிப்பதா? விக்கிரமராஜா கண்டனம்


கடைகளில் கொசு உற்பத்தி ஆவதாக கூறி அபராதம் விதிப்பதா? விக்கிரமராஜா கண்டனம்
x
தினத்தந்தி 28 Oct 2017 9:15 PM GMT (Updated: 28 Oct 2017 6:51 PM GMT)

கடைகளில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதாக கூறி அபராதம் விதிப்பதை கண்டிக்கிறோம் என்று விக்கிரமராஜா கூறினார்.

தூத்துக்குடி,

கடைகளில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதாக கூறி அபராதம் விதிப்பதை கண்டிக்கிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

அறிமுக கூட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மண்டல தலைவர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கண்டனம்

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் ஏற்பட்டு உள்ள பல்வேறு இடர்பாடுகளை அரசு சரிசெய்ய வேண்டும். கந்துவட்டி போல் தான் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளது. கடலை மிட்டாய் போன்ற சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை அரசு எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சல் குறித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு அதிகாரிகள், வணிகர்களின் கடைகளுக்குள் நுழைந்து, இங்கு தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது என்று கூறி, ரூ.1,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கிறார்கள். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். கிராமப்புற மக்களுக்கு வரி விதிப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விலைவாசி உயரும். எனவே முறையான ஆய்விற்கு பின்னரே வரி விதிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாநில பொருளாளர் சதக்கத்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story