இளைஞர்கள் எந்த வேலையாக இருந்தாலும் உண்மை, துணிவுடன் ஈடுபடும் மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்


இளைஞர்கள் எந்த வேலையாக இருந்தாலும் உண்மை, துணிவுடன் ஈடுபடும் மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 28 Oct 2017 7:03 PM GMT)

இளைஞர்கள் எந்த வேலையாக இருந்தாலும் உண்மை மற்றும் துணிவுடன் ஈடுபடும் மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். முகாமுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்புக்கு அதிகமான இளைஞர்கள், பெண்கள் கலந்துகொண்ட கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. தற்போது இளைஞர்களுக்கு வேலையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. தனியார் துறைகளில் வேலை பெறும் இளைஞர்கள் எந்த வேலை என்று பார்க்காமல், உண்மையாகவும், துணிவுடனும், ஆர்வத்துடனும் ஈடுபடும் மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஒரு சிலர் அரசு வேலை வேண்டி மனு அளித்து வருகின்றனர். அரசு வேலை தரமாட்டோம் என்று சொல்லவில்லை. காலத்திற்கு ஏற்ப சுழற்சி முறையில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. எந்த வேலை கிடைத்தாலும், இளைஞர்கள் அந்த வேலையில் வெற்றி பெற வேண்டும். ஒரு இளைஞர் தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்து, அதில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு நுணுக்கங்களை தெரிந்துகொண்டு பலருக்கு வேலைவாய்ப்பு அளிப்பவராக திகழ்ந்து உள்ளார்.

நீலகிரி மாவட்டம் மலைபிரதேசமாகவும், இயற்கை அழகு கொண்ட மாவட்டமாகவும் உள்ளது. இந்த மாவட்டத்தை தூய்மையாக வைக்க இளைஞர்கள் முன் வர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு இடங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக நமது வீடுகளை தூய்மையாகவும், தண்ணீர் தேங்காமலும் வைக்க வேண்டும். நீலகிரியில் டெங்கு இல்லா விட்டாலும், தூய்மையாக வைப்பதில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே சமூக அக்கறை உணர்வு வர வேண்டும். இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம். எனவே, அதனை தெரிந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் கோவை வேலைவாய்ப்பு மண்டல துணை இயக்குனர் ஞானசேகரன், வேலைவாய்ப்பு அலுவலர்கள் ரமேஷ்குமார், சுப்பிரமணியம், கல்லூரி முதல்வர் பார்வதி, செயலாளர் கட்டாரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வேலைவாய்ப்பு முகாமில் 59 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்களின் கூட்டமாகவே காணப்பட்டது. வேலைவாய்ப்பு முகாம் மூலம் 768 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


Next Story