அவினாசியில் 2 குழந்தைகளை கொன்று தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


அவினாசியில் 2 குழந்தைகளை கொன்று தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2017 11:45 PM GMT (Updated: 28 Oct 2017 7:15 PM GMT)

அவினாசியில் 2 குழந்தைகளை கொன்று தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவினாசி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த மீக்கேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 38). என்ஜினீயர். ஊட்டி மேலூரை சேர்ந்தவர் சுதா(36). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருக்கன்காட்டுபுதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. பின்னர் இவர்கள் அவினாசி சேவூர் ரோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் பின்புறம் உள்ள குறுந்தங்காடு பகுதியில் ஒரு வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு பிறந்து 10 மாதங்களே ஆன விவிதா, விகிதா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். செந்தில்குமார் சரிவர வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சுதா தனது கணவர், குழந்தைகளுடன் சென்றார். பின்னர் ஒரு வாரம் அங்கேயே தங்கியிருந்தார்.

அதன்பிறகு நேற்று முன்தினம் செந்தில்குமார் குடும்பத்துடன் அவினாசிக்கு வந்துள்ளார். இரவு செந்தில்குமாருக்கும், சுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செந்தில்குமார், மேட்டுப்பாளையத்தில் உள்ள சுதாவின் தங்கை சுகிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சுதா தன்னிடம் சண்டை போட்டு வருவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சுகிதா தனது தாயாருடன் நாளை(இன்று) காலை வருவதாகவும், அதுவரை இருவரும் சண்டை போடாமல் இருக்குமாறும் செந்தில்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை சுகிதா, தனது அக்கா சுதாவின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. மேலும் செந்தில்குமாரின் செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுகிதா தனது தாயாருடன் நேற்று காலை அவினாசிக்கு அவசர அவசரமாக புறப்பட்டு வந்தார். பின்னர் இருவரும் செந்தில்குமாரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் விவரத்தை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவினாசி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி, இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், லட்சுமணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து செந்தில்குமாரின் வீட்டு ஜன்னலை திறந்துபார்த்தனர். அப்போது வீட்டுக்குள் ஒரு அறையில் செந்தில்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனடியாக வீட்டின் பின்பக்க கதவை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர். அங்கு செந்தில்குமாரின் உடலுக்கு அருகே சுதாவும், மற்றொரு அறையில் இரட்டை குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் பரவியதும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமாரின் வீட்டின் முன்பு திரண்டனர். பின்னர் 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பச்சிளம் குழந்தைகளின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

2 குழந்தைகளை தூக்கிலிட்டு கொலை செய்து அதன்பிறகு தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது கடன் பிரச்சினை எதுவும் காரணமா? என்ற கோணத்தில் அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரட்டை குழந்தைகளை தூக்கில் போட்டு கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத் தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story