கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தந்தை, மகன் தீக்குளிக்க முயற்சி


கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தந்தை, மகன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 28 Oct 2017 11:30 PM GMT (Updated: 2017-10-29T00:45:48+05:30)

கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தந்தை, மகன் தீக்குளிக்க முயன்றனர். ரூ.10 லட்சம் கடன் வாங்கியவர் திருப்பி தராமல் மிரட்டியதால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக தந்தை கூறினார்.

கோவை,

கோவை சூலூர் அருகே உள்ள காரணம்பேட்டை சாலையை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குமார் முன்பு டிரைவராக வேலை செய்து வந்தார். தற்போது எந்த வேலைக்கும் செல்வதில்லை. இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு தனக்கு சொந்தமான நிலத்தை விற்றதில் குமாருக்கு ரூ.10 லட்சம் பணம் கிடைத்தது.

கருமத்தம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு இந்த பணத்தை குமார் கடனாக கொடுத்தததாக தெரிகிறது. பணத்தை திருப்பி தருமாறு குமார் பலமுறை கேட்டபோதும் மோகன்ராஜ் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தன்னுடைய 7 வயது மகனுடன் கோவை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு அலுவலகத்துக்கு குமார் வந்தார். மனு கொடுக்க வந்து இருப்பதாக பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கருதினார்கள்.

அப்போது அவர் திடீரென்று, தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தன் மீதும், மகன் மீதும் ஊற்றி தீப்பற்ற வைக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச் சென்று குமாரின் கையில் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி வீசினர். பின்னர் குமாரையும், அவருடைய மகனையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்றது குறித்து குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரிடம் குமார் கூறியதாவது:–

நான் கடந்த 2015–ம் ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த தங்க நகை வியாபாரி மோகன்ராஜ் என்பவருக்கு ரூ. 10 லட்சம் கடன் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் அவர் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்ராஜை சந்தித்து பணத்தை கேட்ட போது அவர் என் மீது கந்து வட்டி புகார் கொடுத்து விடுவதாக மிரட்டினார்.

நான் இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த போது அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமாதானமாக பேசி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு போலீசார் கூறிவிட்டனர். எனவே நான் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மகனுடன் தீக்குளிக்க முயன்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகனுடன் தீக்குளிக்க முயன்ற குமார் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story