கோவிலுக்கு சென்று மாயமான பெண், ஆற்றில் பிணமாக மிதந்தார் போலீஸ் விசாரணை


கோவிலுக்கு சென்று மாயமான பெண், ஆற்றில் பிணமாக மிதந்தார் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 2017-10-29T01:11:32+05:30)

கோவிலுக்கு சாமி கும்பிட சென்று மாயமான பெண், திருவையாறு அருகே ஆற்றில் பிணமாக மிதந்தார்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமாநேரி புதுத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது36). இவருடைய மனைவி லதா(33). இவர்களுக்கு பிரபஞ்சன், பிரசன்னா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். லதா கடந்த வியாழக்கிழமை திருச்சி மாவட்டம் திருவாணைக்காவலில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சாமிகும்பிட சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் லதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

வழக்குப்பதிவு

இந்தநிலையில் நேற்று காலை திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி அரண்மனைத்தெருவில் உள்ள குடமுருட்டி ஆற்றில் லதா பிணமாக மிதந்தார். இது குறித்த தகவல் அறிந்த நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து லதாவின் அண்ணன் பூண்டி நாகாச்சி பகுதியை சேர்ந்த மகேந்திரன்(35) நடுக்காவேரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதா ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் மரணத்தில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story