ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு கம்பியை சேதப்படுத்திய லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு கம்பியை சேதப்படுத்திய லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 28 Oct 2017 7:55 PM GMT)

ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு கம்பியை சேதப்படுத்திய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறையில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சிலும்பாகவுண்டனூர் பிரிவு உள்ளது. இங்கிருந்து கரிக்காலி தனியார் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் வழியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட்டு வந்தது.

மேம்பாலத்தின் மீது கனரக வாகனங்கள்அடிக்கடி மோதி விபத்துக்கு உள்ளாவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கபட்டதுடன், பாலத்திற்கும் சேதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லாத வகையில் ரெயில்வே மேம்பாலத்தின் முன்பு சாலையின் இருபுறமும் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மதியம் கரிக்காலி தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று இந்த இரும்பு கம்பியின் மீது வேகமாக மோதியது. இதில் தடுப்பு கம்பிகள் துண்டு, துண்டாக உடைந்து கீழே விழுந்தன. நல்ல வேளையாக அந்த நேரத்தில் யாரும் அந்த வழியாக செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே தடுப்பு கம்பியை உடைத்து சென்ற லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு பொதுமக்கள் சார்பில் தகவல் தெரிவித்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இந்த வழித்தடத்தில் செல்லும் கனரக வாகனங்களை தனியார் சிமெண்டு ஆலை நிர்வாகத்தினர் உடனடியாக நிறுத்த வேண்டும், என்றும் வேறு வழித்தடத்தில் கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து சிமெண்டு ஆலை நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரியை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story