2ஜி வழக்கில் தண்டனை வழங்கியதும் ஊழல் கட்சி எதுவென்று தெரியும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு


2ஜி வழக்கில் தண்டனை வழங்கியதும் ஊழல் கட்சி எதுவென்று தெரியும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
x
தினத்தந்தி 28 Oct 2017 11:30 PM GMT (Updated: 2017-10-29T01:25:24+05:30)

2ஜி வழக்கில் தண்டனை வழங்கியதும் ஊழல் செய்யும் கட்சி எதுவென்று தெரியும் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் மேயர் வி.மருதராஜ் தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:–

தமிழகத்தில் நடிகர்களாக இருந்து முதல்–அமைச்சரானவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். வேறு யாரும் ஆகவில்லை. தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், ஊழலுக்காக கலைக்கப்பட்டது தி.மு.க. ஆட்சி மட்டும் தான். அடுத்த மாதம் 2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதில் தண்டனை வழங்கியதும் ஊழல் செய்யும் கட்சி எதுவென்று தெரிந்து விடும்.

மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக்கூறி வழக்கு தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை பெற்றது தி.மு.க. தான். ஆனால், உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் டெங்கு பரவாமல் தடுத்து இருக்கலாம் என்கிறார்கள். டெங்குவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக மத்திய குழுவினர் கூறி இருக்கின்றனர்.

கெயில் எண்ணெய் குழாய் திட்டம், மீத்தேன் திட்டம் என தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். இப்போது போராட்டம் வேறு நடத்துகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட்டு, முதல்–அமைச்சராகி விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அதனால் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறுகிறார்.

மு.க.ஸ்டாலின் எழுச்சி பயணம் தான், தி.மு.க.வின் இறுதி பயணமாக இருக்கும். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யாவிட்டால், அவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் சதி செய்து இருப்பார். தமிழகத்தில் விலைவாசி உயரவில்லை. 30–ந்தேதி இரட்டை சிலை சின்னத்துக்கு நல்ல தீர்ப்பு வர இருக்கிறது. இரட்டை இலை சின்னம் நமக்கு தான் கிடைக்கும்.

இதில் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன், ஆவின் தலைவர் திவான்பாட்சா, அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அ.தி.மு.க.வில் ஏற்கனவே இருந்து விலகி தீபா பேரவையில் இணைந்த ஆனந்தகுமார், அமைச்சருக்கு சால்வை அணிவித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.


Next Story