18 லட்சத்து 64 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை கிலோ ரூ.13.50-க்கு வழங்கப்படும்


18 லட்சத்து 64 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை கிலோ ரூ.13.50-க்கு வழங்கப்படும்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:00 PM GMT (Updated: 2017-10-29T01:25:28+05:30)

தமிழகத்தில் 18 லட்சத்து 64 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை கிலோ ரூ.13.50-க்கு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்பேரில் இந்தியாவில் பொது வினியோக திட்டத்தில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு ஒரு மாதத்துக்கு 33 ஆயிரத்து 836 டன் முதல் 35 ஆயிரம் டன் வரை சர்க்கரை தேவைப்படுகிறது. இந்த தேவையின் அடிப்படையில் சர்க்கரை கிலோ ரூ.13.50-க்கு வழங்கப்பட்டு வந்தது. இப்போது 18 லட்சத்து 64 ஆயிரத்து 600 ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு அதே விலையில் (ரூ.13.50) சர்க்கரை வழங்கப்படும்.

மீதி உள்ள 1 கோடியே 75 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை ரூ.45-க்கு கொள்முதல் செய்யப்பட்டு ரூ.20 மானியத்துடன், சர்க்கரை ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.836 கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது. தமிழகத்தை தவிர ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற வேறு எந்த மாநிலத்திலும் அந்தியோதயா அன்னயோஜனா கார்டுகளை தவிர வேறு எந்த கார்டுகளுக்கும் மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படுவதில்லை.

மத்திய அரசு 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் அந்தியோதயா அன்னயோஜனா கார்டுகளுக்கு ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50-க்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3 கோடியே 46 லட்சம் மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதற்கு மேல் ஏற்படும் செலவை மாநில அரசு ஏற்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கையெழுத்து போட்டதால் சர்க்கரை விலை ஏறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்தபோது அதனை ஆதரித்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டனர். ஆனால் அதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் வாக்களித்தனர். தமிழகத்தில் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் பொது வினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்ட நிலையில் தேவையான பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார். 

Related Tags :
Next Story