சின்னசேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி: கட்டிட உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


சின்னசேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி: கட்டிட உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 28 Oct 2017 8:03 PM GMT)

சின்னசேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது. அப்போது கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான கட்டிட உரிமையாளருக்கு சுகாதாரத்துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

சின்னசேலம்,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை ஒழிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் ஒரு தனியார் கட்டிட உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை துணை ஆட்சியர் சாந்தகுமார் தலைமையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் ஜெமினி, வட்டார மருத்துவ அலுவலர் சுகன்யா, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துகுமரன் மற்றும் அலுவலர்கள் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதி, பஸ் நிலையம், கட்டண கழிவறை, போலீஸ் நிலையம், திருமண மண்டபம், தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகிறதா? என பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைவீதியில் வணிக வளாகம் அமைப்பதற்காக கட்டிடம் கட்டப்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான இடத்துக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தில் இருந்த கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டன.

மேலும், கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான கட்டிட உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக விதித்தனர். இதையடுத்து சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்த மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story