‘நகாய்’ நிறுவன திட்ட இயக்குனர் உள்பட 2 பேர் கைது


‘நகாய்’ நிறுவன திட்ட இயக்குனர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 28 Oct 2017 8:03 PM GMT)

விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்களில் ‘நகாய்’ நிறுவன திட்ட இயக்குனர் பீமசிம்ஹா யார், யாரிடம் இருந்து எவ்வளவு தொகை லஞ்சம் பெற்றுள்ளார் என்ற விவரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் வழுதரெட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராயர் (வயது 57). இவர் சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலையில் உணவகம் கட்டி அதனை வாடகைக்கு விட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையையும், உணவகத்தையும் இணைக்கும் வகையில் பாதை அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனரான பீமசிம்ஹாவிடம் ராயர் அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி கொடுக்க நேற்று முன்தினம் ராயரிடம் இருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய பீமசிம்ஹா, வரைபட வரைவாளர் சரவணன் ஆகிய இருவரையும் சென்னை சி.பி.ஐ. போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்துச்சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், கைதான பீமசிம்ஹா தனது பணி எல்லைக்குட்பட்ட விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கடலூர், திருவண்ணாமலை, நாகை, அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரங்களில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றை அமைக்க அனுமதி கொடுப்பதற்கு பலரிடம் லஞ்சம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் மேற்கண்ட 6 மாவட்டங்களிலும் யார், யாரிடம் இருந்து எவ்வளவு தொகை லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற விவரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் புதுச்சேரி– கிருஷ்ணகிரி, சென்னை– திருச்சி, விக்கிரவாண்டி– கும்பகோணம் ஆகிய தேசிய நெடுஞ்சாலையோரங்களில் இருந்த எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது, அந்த மரங்களை வெட்டியதற்கான காரணம் குறித்து மரங்களை வெட்டிய ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

இதுதவிர பீமசிம்ஹா, வெளிமாநிலங்களிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து அவருடைய சொத்து விவரங்கள் குறித்தும் சி.பி.ஐ. முழுமையாக விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு பின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பீமசிம்ஹா மீது வழக்குப்பதிவு செய்யவும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ‘நகாய்’ நிறுவன திட்ட இயக்குனர் பீமசிம்ஹாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து அவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றினர். மேலும் அவரது வீட்டிலும் தீவிர சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள், அவரது சொத்து பத்திரங்கள் மற்றும் கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக பீமசிம்ஹா, கணக்கு வைத்துள்ள விழுப்புரத்தில் உள்ள 2 வங்கிகளின் கணக்குகளையும் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.


Next Story