காவேரிப்பாக்கம் ஏரியில் கரையின் உறுதித்தன்மையை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


காவேரிப்பாக்கம் ஏரியில் கரையின் உறுதித்தன்மையை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Oct 2017 11:00 PM GMT (Updated: 2017-10-29T01:37:58+05:30)

காவேரிப்பாக்கம் ஏரியை மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் பார்வையிட்டு கரையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தார்.

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி காவேரிப்பாக்கம் ஏரியாகும். இந்த ஏரி 3 ஆயிரத்து 968 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட உயரம் 30.65 அடியாகும். இந்த ஏரியில் உள்ள சிங்க மதகு, கிழவன் மதகு, மூல மதகு உள்பட 10 மதகுகளின் மூலம் தண்ணீர் திறந்து விடலாம். இதன் மூலம் காவேரிப்பாக்கம், கொண்டாபுரம், அய்யன்பேட்டைசேரி, ஈராளச்சேரி, மாகானிப்பட்டு, துரைபெரும்பாக்கம், ஆலப்பாக்கம், அத்திப்பட்டு, பன்னியூர், கீழ்வீராணம், கடப்பேரி, சிறுகரும்பூர், புதுப்பட்டு உள்பட 14 கிராமங்களில் உள்ள கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு 6 ஆயிரத்து 278 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

கடந்த 17-ந் தேதி காவேரிப்பாக்கம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் இதுவரை 12 ஏரிகள் நிரம்பி உள்ளன.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் காவேரிப்பாக்கம் ஏரியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், காவேரிப்பாக்கம் ஏரியின் வரலாறு பற்றியும், ஏரியின் தன்மை, கரையின் உறுதித்தன்மை ஆகியவற்றை கேட்டறிந்து, ஆய்வு செய்தார். கடைவாசல் பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஏரி மற்றும் ஏரிக்கரை பகுதியை ஆய்வு செய்தார்.

அப்போது பனப்பாக்கம், சிப்காட் தனித்துறை கலெக்டர் பூங்கொடி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சந்திரன், நெமிலி தாசில்தார் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராமு, பூபாலன், திலகம், சீனு மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

Related Tags :
Next Story