ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்


ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:30 PM GMT (Updated: 28 Oct 2017 8:10 PM GMT)

ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ‘செனட்’ கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் ‘செனட்’ கூட்டம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். பதிவாளர் பேராசிரியர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். 4 பேராசிரியர் ஜெகநாதன், புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, துணை வேந்தர் துரைசாமி பேசியதாவது:-

நடவடிக்கைகள்

நாட்டிலேயே காகிதம் இல்லா பரிவர்த்தனை செய்யும் ஒரே பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயர் பெற்று இருக்கிறது. தேசிய கல்வி களஞ்சியம் மூலம் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் ஆக்கப்படும். பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின்படி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மாணவர்கள் சென்று படிக்க ஊக்கப்படுத்த விரும்புகிறோம்.

எம்.பில், பி.எச்.டி. படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு பி.எச்.டி. சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்-லைனில் வழங்குதல், பி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடுதல், பல்கலைக்கழக மானியக்குழு எம்.பில், பி.எச்.டி. விதிமுறைகளை (2016) பின்பற்றுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதுகலை படிப்புகளில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. தரமணியில் உள்ள மாணவர் விடுதி, மாணவிகள் விடுதியாக மாற்றி திறந்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய கட்டுப்பாடுகள்

இதையடுத்து பல்கலைக்கழகத்தில் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, துணை வேந்தர் துரைசாமி, ஆய்வு கட்டுரைகள் மற்றும் மதிப்பீடுகள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்கலைக்கழக விதிமுறைப்படி, ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரை மதிப்பீடு செய்வதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் 2 பதிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் ஒருவருக்குத்தான் அவர் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றும் என்று தெரிவித்தார்.

இதற்கு செனட் உறுப்பினர்கள் காந்திராஜ், மணிவாசகம், அனுராதா உள்பட பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். இறுதியாக துணைவேந்தர், பாடத்திட்டக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்து அறிவிப்புகள் வெளியிடுவதாக தெரிவித்தார். 

Next Story