குடும்ப தகராறில் பிரிந்து சென்றதால் ஆத்திரம் மனைவியின் விவரங்களை இணையதளங்களில் பதிவிட்ட என்ஜினீயர் கைது


குடும்ப தகராறில் பிரிந்து சென்றதால் ஆத்திரம் மனைவியின் விவரங்களை இணையதளங்களில் பதிவிட்ட என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2017 8:30 PM GMT (Updated: 28 Oct 2017 8:12 PM GMT)

மனைவியின் படம் மற்றும் விவரங்களை இணையதளங்களில் பதிவிட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

குடும்ப தகராறில் பிரிந்து சென்றதால், மனைவியின் படம் மற்றும் விவரங்களை இணையதளங்களில் பதிவிட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பிரிந்து வாழும் தம்பதி

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஹரிசி கிராமத்தை சேர்ந்தவர் ஹர்சவர்தன் பட் (வயது 31). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் வசித்து கொண்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் ஒருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தம்பதி இடையே குடும்ப வி‌ஷயம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும், அவர்களின் விவாகரத்து வழக்கு குடும்பநல கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இணையதளங்களில் பதிவு

இந்த நிலையில், மனைவியின் மீது ஹர்சவர்தன் பட்டுக்கு கோபம் இருந்து வந்துள்ளது. இதனால், அவர் தனது மனைவியின் படம், செல்போன் எண் உள்பட அனைத்து விவரங்களையும் திருமண இணையதளம் மற்றும் கேளிக்கை விருந்துக்கான இணையதளம் ஆகியவற்றில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த ஹர்சவர்தன் பட்டின் மனைவி சம்பவம் குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர்சவர்தன் பட்டை கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story