பிரதமர் மோடி வருகையையொட்டி தர்மஸ்தாலா- உஜ்ரி சாலையில் போக்குவரத்துக்கு தடை


பிரதமர் மோடி வருகையையொட்டி தர்மஸ்தாலா- உஜ்ரி சாலையில் போக்குவரத்துக்கு தடை
x
தினத்தந்தி 28 Oct 2017 10:00 PM GMT (Updated: 28 Oct 2017 8:18 PM GMT)

பிரதமர் மோடி வருகையையொட்டி தர்மஸ்தாலா- உஜ்ரி சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மங்களூரு,

பிரதமர் மோடி வருகையையொட்டி தர்மஸ்தாலா- உஜ்ரி சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மோடி வருகை

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தாலாவில் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று(ஞாயிற்றுக்கிழமை) மங்களூருவுக்கு வருகை தருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் தர்மஸ்தாலா பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலமாக மஞ்சுநாதா கோவிலுக்கு செல்லும் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். சாமி தரிசனம் முடிந்த பின்னர் தர்மஸ்தாலாவில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உஜ்ரியில் உள்ள ரத்னவர்மா ஹெக்டே மைதானத்தில் நடக்கும் தர்மஸ்தாலா கிராம அபிவிருத்தி திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் மோடி சிறப்புரையாற்ற உள்ளார்.

போக்குவரத்துக்கு தடை

இந்த நிகழ்ச்சிக்காக 75 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் குடிநீர், மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நிகழ்ச்சி நடக்கும் மைதானத்தை சுற்றிலும் தட்சிண கன்னடா மாவட்ட போலீசாரும், சிறப்பு பாதுகாப்பு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பிரதமரின் வருகைக்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக் மோகன், தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் செய்தனர். பிரதமர் மோடி வருகையொட்டி தர்மஸ்தாலாவில் இருந்து உஜ்ரி செல்லும் சாலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 4 வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிசிலா, கொக்காடா வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அதேப்போல பெங்களூரு, உடுப்பி, கார்கலா, மூடுபித்ரியில் இருந்து நிகழ்ச்சிக்கு வருபவர்கள் குருவாயினகெரே, உப்பினங்கடி சாலையில் வர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

Next Story