தொழில்அதிபர் உள்பட 7 பேரிடம் பண மோசடி; பெண் கைது கணவர் கொடுத்த புகாரால் போலீசில் சிக்கினார்


தொழில்அதிபர் உள்பட 7 பேரிடம் பண மோசடி; பெண் கைது கணவர் கொடுத்த புகாரால் போலீசில் சிக்கினார்
x
தினத்தந்தி 28 Oct 2017 9:00 PM GMT (Updated: 2017-10-29T01:52:49+05:30)

பெங்களூருவில், தொழில்அதிபர் உள்பட 7 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவில், தொழில்அதிபர் உள்பட 7 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். கணவர் கொடுத்த புகாரால் அவர் போலீசில் சிக்கினார்.

வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம்

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் சயாக் சென். இவர் டெல்லியை சேர்ந்த அன்ரிலா தாஸ்குப்தா (வயது 30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சயாக் சென் தனது குடும்பத்துடன் பெங்களூரு சி.வி.ராமன் நகரில் வசித்து வருகிறார். சயாக் சென் சர்ஜாபுராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக சயாக் சென்னுக்கு சொந்தமான வங்கி கணக்கு ஒன்றை அன்ரிலா தாஸ்குப்தா பயன்படுத்தினார். அந்த வங்கி கணக்கில் இருந்து பல லட்ச ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது சயாக் சென்னுக்கு தெரியவந்தது. இதுகுறித்து, அவர் தனது மனைவி அன்ரிலா தாஸ்குப்தாவிடம் கேட்டார். ஆனால், அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால், சந்தேகம் அடைந்த சயாக் சென், தனது மனைவி அன்ரிலா தாஸ்குப்தா மீது சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

கைது

முதற்கட்டமாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அன்ரிலா தாஸ்குப்தாவுக்கு சைபர் கிரைம் போலீசார் நோட்டீசு அனுப்பினார்கள். அதன்படி, நேற்று முன்தினம் அவர் சைபர் கிரைம் போலீசாரின் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த விசாரணையின்போது, அன்ரிலா தாஸ்குப்தா பல்வேறு வகைகளில் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததும், அவர் மீது பெங்களூருவில் 4 வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். அன்ரிலா தாஸ்குப்தாவின் மோசடி குறித்து போலீசார் கூறியதாவது:–

ரூ.58 லட்சம் மோசடி

பெங்களூரு, ஒயிட்பீல்டில் வசித்து வரும் தொழில்அதிபர் அசோக் கின்கா என்பவரை கடந்த மார்ச் மாதத்தில் அன்ரிலா தாஸ்குப்தா சந்தித்தார். அப்போது, தான் நிறுவனம் ஒன்று நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தை ரூ.36 கோடிக்கு விற்பனை செய்து உங்களது நிறுவனத்தில் ரூ.20 கோடி முதலீடு செய்வதாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை அசோக் கின்கா நம்பினார். அத்துடன், ரூ.4.20 கோடிக்கான காசோலையை அசோக் கின்காவிடம் அவர் கொடுத்தார்.

இதற்கு அடுத்த சில நாட்களில் தனது கணவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.58 லட்சம் அசோக் கின்காவிடம் இருந்து வாங்கி கொண்டார். நீண்ட நாட்கள் ஆனாலும், அந்த பணத்தை அன்ரிலா தாஸ்குப்தா கொடுக்கவில்லை. இதற்கிடையே, அன்ரிலா தாஸ்குப்தா கொடுத்த ரூ.4.20 கோடிக்கான காசோலை வங்கியில் இருந்து பணம் இன்றி திரும்பியது. அப்போது, தான் அன்ரிலா தாஸ்குப்தா மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

விமான டிக்கெட்டுகள்

இதேபோல், அல்சூரில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் காந்தராஜூ (52) என்பவரிடம் ரூ.1.45 லட்சத்துக்கு 8 விமான டிக்கெட்டுகளை வாங்கியும், கோரமங்களாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் ரூ.1.63 லட்சத்துக்கு விமான டிக்கெட்டுகள் வாங்கியும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி தனது தோழி தியா ரெய்னாவிடம் ரூ.64 ஆயிரமும், தனது சகோதரிக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பாரதிநகரில் வசித்து வரும் பாரதி என்பவரிடம் ரூ.2.50 லட்சத்தையும் வாங்கிய அவர் திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவ்வாறாக அவர் 7 பேரிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். ஜெயநகரில் வசித்து வரும் நடிகரின் மனைவியிடமும் அவர் மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிலரை அவர் ஏமாற்றி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story