போலீஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்: கே.ஜே.ஜார்ஜ் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை ரமேஷ் குமார் பேட்டி


போலீஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்: கே.ஜே.ஜார்ஜ் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை ரமேஷ் குமார் பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2017 10:00 PM GMT (Updated: 2017-10-29T01:57:23+05:30)

போலீஸ் அதிகாரி தற்கொலை விவகாரம் தொடர்பாக கே.ஜே.ஜார்ஜ் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்று மந்திரி ரமேஷ் குமார் கூறினார்.

கோலார் தங்கவயல்,

போலீஸ் அதிகாரி தற்கொலை விவகாரம் தொடர்பாக கே.ஜே.ஜார்ஜ் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்று மந்திரி ரமேஷ் குமார் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார்கள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சத்தியவதி தலைமை தாங்கினார். கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில சுகாதாரத்துறை மந்திரியுமான ரமேஷ் குமார், மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி காவேரி, மாவட்ட கூடுதல் உதவி கலெக்டர் வித்யா குமாரி உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மந்திரி ரமேஷ் குமார் பேசியபோது கூறியதாவது:–

பட்டா செய்து கொடுக்கப்படும்

இன்னும் ஒரு மாதத்திற்குள் மாவட்டத்தில், சொத்துகளை பிரித்து பட்டா செய்து தரக்கோரி விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் பட்டா செய்து கொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். அதேபோல் பல ஆண்டுகளாக அரசு நிலங்களில், விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு அதே இடங்களை பட்டா செய்து வழங்குவதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கோலாருக்கு முதல்–மந்திரி சித்தராமையா வருகை தருகிறார். அப்போது விவசாயிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படும். அதேபோல் சொத்துகளை பிரித்து பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கும் பட்டா வழங்கப்படும். கோலார் மாவட்டம், பட்டா குறைபாடு இல்லாத மாவட்டமாக திகழ வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள்

பள்ளிக்கூட மாணவ–மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற தாசில்தார் அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம் போன்றவற்றிற்கு பலமுறை அலைந்தும், அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், மேலும் அவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் எனக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடுமயான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பணியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு மந்திரி ரமேஷ் குமார் பேசினார்.

நேர்மையாக பணிபுரிந்து...

இதைத்தொடர்ந்து கலெக்டர் சத்தியவதி பேசுகையில், ‘‘தற்போது மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இது அந்த துறைக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. அந்த கெட்ட பெயரை பொதுமக்கள் மனதில் இருந்து நீக்க அதிகாரிகள் நேர்மையாக பணிபுரிந்து பொதுமக்கள் எளிதாக அரசு உதவிகளை பெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்று பேசினார்.

கூட்டம் முடிந்த பிறகு மந்திரி ரமேஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ராஜினாமா செய்ய தேவையில்லை

போலீஸ் அதிகாரி தற்கொலை வழக்கில், மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்த விவகாரத்திற்காக கே.ஜே.ஜார்ஜ், மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை. மாநில அரசு ஏற்கனவே அந்த போலீஸ் அதிகாரியின் தற்கொலை விவகாரம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.ஐ.டி. விசாரணையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் தற்போது சி.பி.ஐ. அவரை முதல் குற்றவளியாக சேர்த்துள்ளது. அவருக்கு நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story